வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (01/11/2018)

கடைசி தொடர்பு:07:14 (02/11/2018)

சைகை காட்டிய தோனி; சம்பவம் செய்த ஜடேஜா - ஒரு ஜாலி கொண்டாட்டம்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் போட்டித்தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, ரோஹித் ஷர்மாவை பலூன் வெடித்து ஜடேஜா பயமுறுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.

ரோஹித் தோனி

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவு அணி டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக தொடரைக் கைப்பற்றியது. அதே போல, இன்று நடைபெற்ற இறுதி ஒருநாள் போட்டியில்  வெற்றி பெற்று இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில், தொடரைக் கைப்பற்றிய வெற்றியைக் கொண்டாடும் வகையில் இந்திய அணிவீரர்கள் கேக் வெட்டினர். அப்போது, வீரர்களுக்கிடையே நடைபெற்ற நிகழ்வு சுவராஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வெளியான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ரோஹித் ஷர்மா கேக் வெட்டுகிறார். கையில் பலூனுடன் தோனி பின்னால் நிற்கிறார். ரோஹித் ஷர்மா கேக் வெட்டும்போது, தன் கையிலிருக்கும் பலூனை ரோஹித் அருகே கொண்டுசென்று வெடிக்கலாம் என தோனி சைகை காட்டுகிறார். இதையடுத்து, அருகிலிருந்த ஜடேஜா பலூனைக் கொண்டு ரோஹித் பக்கத்தில் வைத்து வெடிக்கிறார். வெடிச்சத்தம் கேட்டு, ரோஹித் மிரள, இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பை ஏற்படுத்தியது. பின்னர் ரோஹித் கேக் வெட்டினார். வெட்டிய அதை, கேதார் ஜாதவ் முகத்தில் பூசி கலாட்டா செய்கிறார். குதூதுகலாமாக வீரர்கள் வெற்றியைக் கொண்டாடினர். இந்த வீடியோ ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.