வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (02/11/2018)

கடைசி தொடர்பு:08:43 (02/11/2018)

தோனி நீக்கம் ஏன்? - மெளனம் கலைத்த கோலி

`தோனியின் நீக்கம் குறித்து அணித் தேர்வுக்குழுவினர் ஏற்கெனவே பதிலளித்துவிட்டனர் இதில் நான் பேசுவதற்கு எதுவும் இல்லை' என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

விராட் கோலி

Credits:ANI

மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டி-20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை பி.சி.சி.ஐ கடந்த சில நாள்களுக்கு முன்னர் அறிவித்தது. இதில் தோனி பெயர் இடம் பெறாததால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான தொடருக்கு தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தோனியின் நீக்கம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேர்வுக்குழுத் தலைவர் எம்.கே.பிரசாத், ``2-வது விக்கெட் கீப்பரை தயார் செய்யும் நோக்கத்தில் தான் தோனி விடுவிக்கப்பட்டார்'' என்றார். பேட்டிங்கில் தோனி இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது. தோனியிடம் அந்தப் பழைய ஆக்ரோஷமான ஆட்டத்தைக் காண முடியவில்லை. ஆனால், ஸ்டெம்புக்குப் பின்னால் தோனிதான் கில்லி. மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் தனது மின்னல் வேக ஸ்டெம்பிங் மூலம் எதிரணியை மிரளச் செய்தார். தோனி பின்னால் நின்றால் பேட்ஸ்மேன்கள் கிரீஸ்-லில் இருந்து காலை எடுக்க யோசிக்கும் நிலைதான் இன்றும் உள்ளது. 

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 15 ஓவரில் இலக்கை எட்டி அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களைக் கோலி சந்தித்தார். அப்போது மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டி-20 தொடரில் தோனி சேர்க்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த கோலி, ``அணித்தேர்வுக்குழுவினர் இந்த விவகாரம் குறித்து ஏற்கெனவே பதிலளித்துவிட்டனர். இந்த முடிவை எடுப்பதற்கு முன்பு அவர்கள் தோனியிடம் பேசியுள்ளனர். அதனால் இங்கு அமர்ந்துகொண்டு நான் எதையும் விளக்க வேண்டிய அவசியமில்லை. அணித்தேர்வுக்குழுவினரே என்ன நடந்தது என்பதை முழுமையாக விளக்கிவிட்டனர். அந்த உரையாடல்களின்போது நான் இல்லை. மற்றவர்கள் யூகிப்பது போன்று எதுவும் நடக்கவில்லை. எப்படியிருந்தாலும் அவர் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் ஆடப்போகிறார். தோனி எப்போதும் இளம்வீரர்களுக்கு உதவக்கூடியவர். அந்தக் கோணத்தில் இருந்து பார்க்கும்போது அவர் இளம் வீரர்களுக்கு உதவியுள்ளார். இதில் மற்றவர்கள் யூகிப்பதுபோல் எதுவும் இல்லை. ஒரு கேப்டனாக உறுதியாகக் கூறுகிறேன். என்றார்.