கெய்ல் 175 நாட் அவுட்: பெங்களூர் அணி 263 ரன் குவிப்பு

பெங்களூரு: பெங்களூருவில் நடந்து வரும் ஐபிஎல் போட்டியின் 31வது லீக் ஆட்டத்தி்ல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி4 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்கள் குவித்துள்ளது. அதிரடியாக விளையாடிய கிறிஸ் கெயல் 175 ரன் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

டாஸ் வென்று பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக மேற்கிந்திய தீவை சேர்ந்த கிறிஸ் கெய்லும், இலங்கையை சேர்ந்த தில்சானும் களம் இறங்கினர்.

தொடக்கமே அதிரடியாக விளையாடிய கெய்ல், 30 பந்தில் சதம் அடித்தார். இவரது அதிரடி ஆட்டத்தை கண்டு புனே வாரியர்ஸ் அணி பந்துவீச்சாளர்கள் மிரண்டு போனார்கள்.

மறுமுனைவில் விளையாடிய தில்சான் 33 ரன்னில் வெளியேற, பின்னர் கேப்டன் கோலி களம் இறங்கினார். இவர் சிறிது நேரம் கூட நிலைத்து நிற்கவில்லை. 11 ரன் எடுத்திருந்த கோலி, ரன் அவுட் ஆனார்.

இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா வீரர் டி வில்லியர்ஸ் களம் இறங்கினார். அவரும் தனது பங்குக்கு புனே வாரியர்ஸ் அணி வீரர்களின் பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்தார். 8 பந்தில் 31 ரன் குவித்த டி வில்லியர்ஸ், மார்ஷ் பந்தில் ஆட்டம் இழந்தார். இதில் 3 சிக்சர், 3 பவுண்டரிகள் அடக்கம்.

இதைத் தொடர்ந்து, கெய்லுடன் திவாரி ஜோடி சேர்ந்தார். திவாரி 2 ரன் எடுத்த திருப்தியோடு வெளியேறினார். மறுமுனையில் சரவெடி காட்டி கெய்ல் 53 பந்தில் 153 ரன்கள் குவித்தார்.

20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து  263 ரன்கள் எடுத்தது. 66 பந்தில் 175 ரன் குவித்த கெய்ல்  கடைசி வரை ஆட்டம் இழக்கவில்லை. கெய்ல் 13 பவுண்டரி, 17  சிக்சர்களை விளாசினார்.

264 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் புனே வாரியர்ஸ் அணி களம் இறங்க உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!