வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (04/11/2018)

கடைசி தொடர்பு:04:54 (04/11/2018)

விமானத்தைத் தவறவிட்ட ரஸல்; முதல் டி20 போட்டியில் விளையாடுவதில் சிக்கல்! #INDvWI

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர் ரஸல், இந்திய அணிக்கு எதிரான முதலாவது டி20 ஆட்டத்தில் விளையாட மாட்டார் என்று தெரிகிறது.

ரஸல்

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. டெஸ்ட் தொடரை எளிதில் வென்றாலும், ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு கடும் சவால் அளித்தது.

வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர்களைக் கொண்ட அணி. அவர்கள், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளை விட டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி எதிரணிக்கு அதிர்ச்சி அளிக்க வல்லவர்கள். அதனால் டி20 தொடரை எப்படியும் கைப்பற்றி விட வேண்டும் நோக்கத்தோடு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், டி20 போட்டிக்கான  வெஸ்ட் இண்டீஸ் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. அனுபவ வீரர்கள் பொல்லார்டு, டேரன் பிராவோ மற்றும் ஆண்ட்ரே ரஸல் ஆகியோர் அணையில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் இந்தியாவில் ஐ.பி.எல் போட்டிகள் விளையாடி அனுபவம் கொண்டவர்கள். 

இவர்கள் கடந்த 1 -ம் தேதி முதலாவது டி20 போட்டி நடக்கும் கொல்கத்தாவுக்கு வந்திருக்க வேண்டும். பொல்லார்டு, பிராவோ உள்ளிட்ட 7 வீரர்கள் வந்துவிட்ட நிலையில் ஆண்ட்ரே ரஸல் மட்டும் வரவில்லை. இது தொடர்பாக விசாரித்ததில், துபாயில் இருந்து ஏறவேண்டிய கனெக்ட்டிங் விமானத்தை அவர் மிஸ் செய்துவிட்டதாகத் தகவல் கிடைத்தது. இது தொடர்பாக பெங்கால் கிரிக்கெட் அஸோசியேஷன் மேனேஜர் கூறுகையில்,  ``ஆண்ட்ரே ரஸல் துபாயில் இருந்து கொல்கத்தா வந்திருக்க வேண்டும். ஆனால் அவர் அந்த விமானத்தைத் தவறவிட்டிருக்க வேண்டும். 7 வீரர்கள் லண்டன் வழியாக வந்துவிட்டனர். ஆனால் ரஸல் இன்னும் வரவில்லை” என்றார். 

ஆண்ட்ரே ரஸல் ஏன் பயிற்சிக்கு வரவில்லை என வெஸ்ட் இண்டீஸ் அணியின் செய்தி தொடர்பாளரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர், பதிலளிக்க மறுத்துவிட்டார். மேலும், விரைவில் இது தொடர்பாக ஊடகங்களுக்கு அறிக்கை தரப்படும் என்பதோடு முடித்துக்கொண்டார். 

ஆண்ட்ரே ரஸல், ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடியவர். கொல்கத்தா மைதானத்தில் அதிகப்படியான ஆட்டங்களில் அவர் விளையாடியுள்ளதால், அவரது அனுபவம் கைகொடுக்கும் என்று எதிர்பார்த்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகத்துக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. எனினும் இன்னும் அவர் முதல் டி20 போட்டியில் விளையாடுவது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.