வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (04/11/2018)

கடைசி தொடர்பு:07:30 (04/11/2018)

முதல்தர போட்டிகளில் இருந்து அம்பதி ராயுடு `திடீர்’ ஓய்வு!

இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு முதல்தரப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். ஓய்வுக்கான காரணம் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

ராயுடு

Photo Credit: BCCI

இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது நடுவரிசையில் தன்னுடைய இடத்தைத் தக்க வைத்துள்ளார் அம்பதி ராயுடு. அடுத்தாண்டு 50 ஓவர் உலகக்கோப்பைத் தொடர் நடைபெறவுள்ள நிலையில் இனிவரும் போட்டிகள் வீரர்களுக்கு முக்கியமானது. அடுத்து வரும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு உலகக்கோப்பை தொடரில் தேர்வாக வாய்ப்புகள் அதிகம். அதனால் வீரர்கள் உலகக்கோப்பை தொடரில் தங்களின் இருப்பை உறுதி செய்ய, அடுத்து வரும் தொடர்களில் தங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தயாராகி வருகின்றனர். 

கடந்த ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்காகக் களமிறங்கி அசத்திய அம்பதி ராயுடு, அதன்மூலம் இந்திய  ஒருநாள் அணிக்குத் தேர்வானார். தற்போது நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் 4 -வது இடத்தில் களமிறங்கி அசத்தினார். 4 -வது இடத்தில் சிறப்பாக விளையாடி, தனது இடத்தைத் தக்கவைத்துள்ளார் என இந்திய கேப்டன் கோலியும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் 33 வயதான ராயுடு முதல் தர டெஸ்ட் போட்டிகளில் இருந்து  ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளார். 

இது தொடர்பாக ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம்  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ``ஹைதராபாத் அணியின் கேப்டனான் அம்பதி ராயுடு முதல்தர டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிக கவனம் செலுத்த அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். அவர் சர்வதேச மற்றும் உள்ளூர் ஒருநாள், டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார். பிசிசிஐ, ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம், ஆந்திர கிரிக்கெட் சங்கம், பரோடா கிரிக்கெட் சங்கம் மற்றும் விதர்பா கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றுக்கு ராயுடு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ராயுடு தனது 16 -வது வயதில் 2002 -ம் ஆண்டு முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமானார்.  ராயுடு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இதுவரை ஆடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அனுபவம் தான் கிரிக்கெட்டில் அடிப்படை. ராயுடுவின் இந்த முடிவு அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் என சிலர் விமர்சித்துள்ளனர். அதேநேரம்,  இந்திய அணியில் 4 -வது இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள இது நல்ல முடிவு எனப் பலர் பாராட்டவும் செய்துள்ளனர்.