வெளியிடப்பட்ட நேரம்: 15:55 (04/11/2018)

கடைசி தொடர்பு:16:25 (04/11/2018)

`சாஃப்ட்வேர் டு கிரிக்கெட்’ - அமெரிக்க அணியின் கேப்டனான மும்பை இன்ஜினியர்!

இந்தியாவைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி அமெரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சவுரப்


மும்பை சேர்ந்த கிரிக்கெட் வீரரான சவுரப் நெட்ராவல்கர் இந்தியாவுக்காக முதல் தரப்போட்டிகளில் விளையாடியுள்ளார். இடதுகை வேகப்பந்துவீச்சாளரான இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் விளையாடினார். அந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றினார். படிப்பிலும் சிறந்த விளங்கியவர் பொறியியல் படிப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். 2013-ல் தேர்ச்சி பெற்ற இவருக்கு அமெரிக்காவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது. ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடத் தேர்வானதால் அந்த அழைப்பை ஏற்க மறுத்து உள்ளூர் தொடரில் விளையாடினார். ஆனால் அந்தப்போட்டியில் அவரது செயல்பாடுகள் சிறப்பாக இல்லை. அதனையடுத்து இரண்டு வருடமாக கிரிக்கெட் போட்டிகளிலே கவனம் செலுத்தினார். சரியான வாய்ப்பு அமையாததால் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிய முடிவு செய்து அதற்கான தேர்வுகளில் பங்கேற்றுள்ளார்.


அமெரிக்காவில் இருந்து மீண்டும் அழைப்பு வர தனது கிரிக்கெட் கனவை மூட்டைக்கட்டி விட்டு அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு சாதாரணமாக கிரிக்கெட் விளையாடத் தொடங்கியவருக்கு நண்பர்கள் வட்டம் விரிவானது. அப்போது அமெரிக்கன் காலேஜ் கிரிக்கெட் க்ளப் பற்றிக் கேள்விப்பட்டவர் அங்குத் தன்னை உறுப்பினராகச் சேர்த்துக்கொண்டார். தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடிவந்த சவுரப் தனது திறமையை நிருபித்தார். தற்போது இவர் அமெரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வாகியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள சவுரப் நெட்ராவல்கர், தேசிய அணிக்கு கேப்டனாக தேர்வானதை கெளரவமாக கருதுகிறேன். அமெரிக்க அணியில் இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் வீரர்களும் உள்ளனர். கரீபியன் ப்ரீமியர் லீக் போட்டிகளில் கயானா வாரியர்ஸ் அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.