வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (04/11/2018)

கடைசி தொடர்பு:17:30 (04/11/2018)

`தோனியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது!’ - நெஹ்ரா பளீச்

தோனியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா கருத்துத் தெரிவித்திருக்கிறார். 

தோனி

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கெதிரான டி20 தொடர்களில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. தோனி தேர்வு செய்யப்படாதது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற வாதமும் பரவலாக எழுந்து வருகிறது. இதனால், தோனியின் டி20 கரியருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதாக எழுந்த விமர்சனத்துக்குத் தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கமளித்திருக்கிறார். அதேபோல், தேர்வுக் குழுவினரின் எண்ண ஓட்டம் எப்படி இருக்கிறது என்பது தெரியவில்லை என முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கருத்துத் தெரிவித்திருக்கிறார். 

இந்தநிலையில் சமீபத்தில் ஓய்வுபெற்ற இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா, தோனியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து பேசிய நெஹ்ரா, ``விக்கெட் கீப்பிங் பணியைச் செய்ய ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களின் செயல்பாடுகளும் சிறப்பாகவே இருக்கிறது. ஆனால், தோனியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. தோனிக்கு நிகர் தோனிதான். களத்தில் ஒரு வீரராக அவரது செயல்பாடுகள் சஹால், குல்தீப், பும்ரா மற்றும் குறிப்பாக கேப்டன் விராட் கோலிக்கு பெரிய அளவில் உதவிகரமாக இருக்கும். தான் என்ன செய்கிறோம் என்பதை தோனி நன்கறிவார். ஆசியக் கோப்பை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர் ஆகியவற்றில் தோனி சிறப்பாகச் செயல்படவில்லைதான். ஆனால், அவருக்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கின்றன. ஆஸ்திரேலியாவில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். எனவே, தோனி குறித்து கவலைப்படுவதை நிறுத்துங்கள்’’ என்று தெரிவித்திருக்கிறார்.