வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (04/11/2018)

கடைசி தொடர்பு:18:54 (04/11/2018)

`இது ஒன்றைத் தவிர எல்லா பேட்டிங் ரெக்கார்டுகளையும் கோலி முறியடிப்பார்!’ - ஸ்டீவ் வாக் கணிப்பு

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் மனம் திறந்திருக்கிறார். 

விராட் கோலி

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. நவம்பர் 21 முதல் 2019ம் ஆண்டு ஜனவரி 18ம் தேதி வரை இந்தத் தொடர் நடைபெறுகிறது. முன்னணி வீரர்கள் இல்லாத நிலையில், டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சமீபத்திய தொடர்களில் தடுமாறி வருகிறது. குறிப்பாகத் துபாயில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரில் ஆஸ்திரேலிய அணியின் செயல்பாடு விமர்சனத்தைச் சந்தித்தது.

இந்திய அணியின் ஆஸ்திரேலிய தொடர் குறித்து அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் பேசியிருக்கிறார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் இணையதளத்துக்குப் பேட்டியளித்துள்ள அவர், இந்திய அணி, கேப்டன் விராட் கோலி, இளம் வீரர் ப்ரித்வி ஷா உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்திருக்கிறார். விராட் கோலி குறித்து பேசிய அவர், ``கிரிக்கெட் விளையாட்டை மிகவும் நேசிக்கும் வீரராக விராட் கோலி இருக்கிறார். சிறந்த பங்களிப்பை அளித்து வரும் கோலி, உடலையும் ஃபிட்டாக வைத்திருக்கிறார். கடுமையான காயம் ஏற்பட்டால் ஒழிய, கிரிக்கெட்டில் இருந்து அவர் ஒதுங்கி இருப்பதில்லை. டான் பிராட்மேனின் பேட்டிங் ஆவரேஜைத் தவிர அனைத்து பேட்டிங் ரெக்கார்டுகளையும் அவர் முறியடிப்பார்’’ என்றார். 

பிரித்வி ஷா குறித்து பேசிய ஸ்டீவ் வாக், ``டெண்டுல்கரைப் போல் பேட்டிங் ஸ்டைல் கொண்ட இளம் வீரர் ப்ரித்வி ஷா இந்தத் தொடரில் சிறப்பாகச் செயல்படுவார் என்று நம்புகிறேன். கவாஸ்கர், டெண்டுல்கர், விராட் கோலி வரிசையில் ப்ரித்வி ஷாவும் இருப்பார் என்று கருதுகிறேன். 130 கோடி மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் மிகப்பெரிய பொறுப்பை அவர்கள் சிரத்தையுடன் செய்வார்கள்’’என்றார்.