வெளியிடப்பட்ட நேரம்: 20:50 (04/11/2018)

கடைசி தொடர்பு:20:55 (04/11/2018)

இந்திய அணிக்கு நச் இலக்கு... அசத்திய குல்தீப்!

இந்திய அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

குல்தீப் யாதவ் - ரோஹித் ஷர்மா

Photo Credit:ICC

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த போட்டிகளில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கிடையேயான முதலாவது டி20 கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. மாலை 7 மணி அளவில் தொடங்கிய அந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற இந்திய அணி பௌலிங் தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் இன்னிங்ஸை ஷாய் ஹோப் மற்றும் தினேஷ் ராம்தின் இணை தொடங்கினர். இந்த ஜோடியை 2வது ஓவரின் முதல் பந்திலேயே உமேஷ்யாதவ் பிரித்தார். தினேஷ் ராம்தின் 2 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து ஹோப்புடன், ஹெட்னெயர் கைகோத்தார்.

ஹோப் 14 ரன்களிலும், ஹெட்மெயர் 10 ரன்களிலும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அதிரடி வீரர் பொலார்ட், அறிமுக வீரர் குர்ணால் பாண்டியாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 26 பந்துகளைச் சந்தித்த அவர் 14 ரன்களுடன் வெளியேறினார். அடுத்த ஓவரில் 5 ரன்களில் டேரன் பிராவோவும் வெளியேறினார். பவல் மற்றும் கேப்டன் பிராத்வெயிட் ஆகியோர் தலா 4 ரன்கள் எடுத்து வெளியேற, வெஸ்ட் இண்டீஸ் அணி, 14.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் சேர்த்து தடுமாறியது. கடைசி ஓவர்களில் அறிமுக வீரர் ஆலென் அதிரடி காட்ட, வெஸ்ட் இண்டீஸ் அணி 100 ரன்களைக் கடந்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.