வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (04/11/2018)

கடைசி தொடர்பு:22:00 (04/11/2018)

`முதல்முறையாக 7 ஒருநாள் போட்டிகளில் தொடர் தோல்வி!’ - ஆஸ்திரேலிய அணி மோசமான சாதனை

ஒருநாள் போட்டி வரலாற்றில் முதன்முறையாக 7 போட்டிகளில் தொடர் தோல்விகளைச் சந்தித்துள்ளது ஆஸ்திரேலிய அணி. 

ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா

ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 38.1 ஓவர்களில் 152 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 8 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி, ஒரு கட்டத்தில் 66 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால், அந்த அணி 100 ரன்களைக் கடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. வேகப்பந்து வீச்சாளர் கோல்டர் நைல் 34 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலிய அணி 150 ரன்களைக் கடந்தது. சிறிய இடைவெளிக்குப் பின்னர் தென்னாப்பிரிக்க அணிக்குத் திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் 2 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். 

153 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி, வெற்றி இலக்கை 29.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டியது. இதன்மூலம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தின் வென்ற தென்னாப்பிரிக்கா, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களான குயின்டன் டிகாக் - ஹெண்ட்ரிக்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்தது. டிகாக் 47 ரன்களும், ஹெண்ட்ரிக்ஸ் 44 ரன்களும் சேர்த்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டோனிக்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இது ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாகத் தோல்வியைச் சந்திக்கும் 7வது ஒருநாள் போட்டி ஆகும். ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் போட்டி வரலாற்றில் அந்த அணி தொடர்ச்சியாக 7 போட்டிகளில் தோற்பது இதுவே முதல்முறை. இதற்கு முன்பாகக் கடந்த 1996ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி முதல் நவம்பர் 3 வரையிலான காலகட்டத்தில் அந்த அணி தொடர்ச்சியாக 6 ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.