வெளியிடப்பட்ட நேரம்: 22:48 (04/11/2018)

கடைசி தொடர்பு:10:55 (05/11/2018)

முதல் போட்டியில் முத்திரை பதித்த குர்ணால் பாண்டியா  - வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது இந்தியா!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. 

குர்ணால் பாண்டியா

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடிவருகிறது. இதுவரை நடந்த போட்டிகளில், டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கிடையேயான முதலாவது டி20 கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. மாலை 7 மணி அளவில் தொடங்கிய அந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற இந்திய அணி பௌலிங் தேர்வுசெய்தது. இதில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் உட்பட அனைவரும் சொதப்பினர். பொல்லார்ட், ஹோப், பிராத்வெயிட், பவல்  என முக்கிய வீரர்கள் அனைவரும் சோபிக்கத் தவறினர். இருப்பினும், கடைசி ஓவர்களில் அறிமுக வீரர் ஆலென் அதிரடி காட்ட, வெஸ்ட் இண்டீஸ் அணி 100 ரன்களைக் கடந்தது. அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். 

இதையடுத்து, தனது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கும் தொடக்க வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர். ரோஹித் ஷர்மா 6 ரன்களிலும், ஷிகர் தவான் 3 ரன்களிலும் வெளியேறினர். ரிஷப் பான்ட் ஒரு ரன்னுக்கு வெளியேறினாலும், கே.எல்.ராகுல் மற்றும் மனீஷ் பாண்டே ஓரளவுக்கு நிதானம் காட்டினர். இருவரும் முறையே தலா 16 மற்றும் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர், இணைந்த தினேஷ் கார்த்திக், குர்ணால் பாண்டியா நிதானமாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர்.  17.5 ஓவர்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டி இந்திய அணி வெற்றிபெற்றது. இதன்மூலம், மூன்று போட்டிகள்கொண்ட டி20 தொடரில் இந்தியா 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. குல்தீப் யாதவ், ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்றார். இதற்கிடையே, தனது அறிமுகப் போட்டியில் முத்திரை பதித்துள்ளார் குர்ணால் பாண்டியா. பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிலும் சிறப்பாக அவர் செயல்பட்டார். 4 ஓவர்கள் வீசிய அவர், 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். இதேபோல, பேட்டிங்கில் 9 பந்துகள் பிடித்து 21 ரன்கள் விளாசினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க