வெளியிடப்பட்ட நேரம்: 11:25 (05/11/2018)

கடைசி தொடர்பு:11:45 (05/11/2018)

விராட் கோலி - 99 சதவிகித பெர்ஃபெக்ஷனோடு ஆடும் AI மெஷின்! #HBDKingKohli

கிரிக்கெட் கடவுளின் ஆகச்சிறந்த ஆற்றலை இப்போது தன் விரல்களில் சுமந்துகொண்டிருக்கும் ஓவியர் இவர். ஆம், விராட் கோலி - தூரிகையை ஆயுதமாகக் கொண்ட ஓர் AI மெஷின்! 

விராட் கோலி - 99 சதவிகித பெர்ஃபெக்ஷனோடு ஆடும் AI மெஷின்! #HBDKingKohli

கொல்கத்தாவில் நடந்த ஒரு நிகழ்வில் பேசிக்கொண்டிருக்கிறார் தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித். டெஸ்ட் கிரிக்கெட்டின் வீழ்ச்சி பற்றி கேட்கப்படுகிறது. கிரிக்கெட்டின் உயிரான அந்த ஃபார்மட்டைக் காப்பாற்றக்கூடியவர் என்று ஒற்றை ஆளைக் கைகாட்டுகிறார் ஸ்மித். ஆம், ஒரேயொரு ஆளை - இந்திய கேப்டன் விராட் கோலி! 

``டெஸ்ட் கிரிக்கெட் மிகப்பெரிய நட்சத்திரங்கள் இல்லாமல் திணறுகிறது. இந்த உலகம் பல லாராக்களைக் காணும். ஆனால், அதைக் காப்பாற்றப் போவது விராட் கோலி போன்ற வீரர்தான். டி-20 மற்றும் ஐ.பி.எல் போட்டிகளை மட்டும் விரும்பும் ஒரு நாட்டில், கோலி டெஸ்ட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டிருக்கிறார். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்வரை அந்த ஃபார்மட் வாழும்!" என்றார் ஸ்மித். இன்று பிறந்தநாள் என்பதற்காகக் கோலியைப் பற்றி ஏதாவது எழுதவேண்டும். ஆனால், இதற்கு மேலும் அந்த மனிதனை எப்படிப் பாராட்டுவது, வாய்ப்பில்லை. 

விராட் கோலி

பாராட்ட மட்டுமா, விமர்சிக்கவும் நிறையவே இருக்கிறது. கடந்த வாரம் வரை விமர்சனங்கள் இவரை விட்டபாடில்லை. சதமடித்தபோதும், சாதனைகள் படைத்தபோதும் விமர்சிக்கப்பட்டாரே! எல்லாம் ரசிகர்களின் பார்வையைப் பொறுத்துத்தான். சிலர் `சிறந்த வீரர்' என்று நிறுத்திக்கொள்வார்கள். சிலர் `இவர்தான் சிறந்த வீரர்' என்பார்கள். இன்னும் சிலர் `நிகழ்காலத்தின் சிறந்த வீரர்' என்கிறார்கள். எல்லாம் அவரவர் பார்வையைப் பொறுத்தது. அதற்குள் நுழைந்தால் வாதங்கள்தாம் எழும். வேண்டாம். ஆனால், எல்லோரும் ஒரேமாதிரி கோலியைப் பார்க்கும் ஒரு விஷயம்தான் உறுத்தலாக இருக்கிறது. `ரன் மெஷின்'. ரன்கள் அடித்துக்கொண்டே இருக்கிறார் என்பதற்காக அவரை ரன் மெஷின் என்று சொல்வது சரியா தெரியவில்லை. கோலி மெஷின் மட்டுமே இல்லை. அவர் எந்திரன் பாதி... ஓவியன் மீதி..!

இல்லை... கோலி மெஷின் மட்டுமல்ல...

``பேட் வெறும் பொம்மை அல்ல. அதுதான் என் ஆயுதம்" என்று ஒருமுறை சொல்லியிருந்தார் கோலி. அவருக்கு மட்டுமல்ல, எல்லா பேட்ஸ்மேன்களுக்கும் அப்படித்தான். ஆனால், அதற்கு அவர்கள் என்ன உருவம் கொடுக்கிறார்கள் என்பது அவர்களின் அணுகுமுறையைப் பொறுத்துத்தான். அதுதான் அந்த வீரரின் அடையாளமாகும். உதாரணமாக : கெய்ல் - ஹிட்டர், லாரா - கிளாசிக் பேட்ஸ்மேன். ஒரு பேட்ஸ்மேன் தன் சிக்ஸர்களால், சதங்களால், சாதனைகளால் ரசிகர்களைக் கொண்டாடவைக்க மட்டுமே முடியும். ஹிட்டர்களால் அது மட்டுமே செய்ய முடியும். ஆனால், ஒரு கிளாசிக்கல் பேட்ஸ்மேனால் மட்டும்தான் ரசிகர்களை வெற்றி, தோல்வி கடந்து ரசிக்கவைக்க முடியும். அந்த ரசிகனின் ரசனையைத் தூண்ட முடியும். 

கோலி

சரி, ரசனையைத் தூண்டும் ஒரு ஷாட் எப்படி இருக்கவேண்டும், பந்து பேட்டில் பட்டதும் நம்மைத் துள்ளிக் குதிக்கவைக்கக் கூடாது. ஒரு நொடி நம் உணர்வுகளை ஸ்தம்பிக்க வைக்கவேண்டும். அந்த உணர்வுகள் திரும்பியவுடன் ரோமங்களைச் சிலிர்க்கவைக்கவேண்டும். அடுத்த நொடி, கண்ணுக்குள் பலநூறு முறை அந்த ஷாட் ரீப்ளே ஆகவேண்டும். சிலிர்த்த ரோமங்கள் சீராகும்போதுதான் கொண்டாடத்தொடங்க வேண்டும். அந்த பேட்ஸ்மேன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினாலும், சாதனைகள் ஏதும் படைக்கத் தவறினாலும், அந்த ஷாட் கண்ணை விட்டு அகலாது. ஓவியம் போல்! ஆம், ஒரு கிரிக்கெட் ஷாட்டை ஓவியமாகவும் பார்க்கலாம். அந்த பேட்டை தூரிகையாகவும் பார்க்கலாம். கோலியின் கையில் இருப்பது தூரிகை என்ற ஆயுதம்! 

கோலியை - கேப்டனாக, ஐகானாக, இன்ஸ்பிரேஷனாகவெல்லாம் பார்க்கவேண்டாம். அவர் வென்ற கோப்பைகளைப் பார்க்கவேண்டாம். களத்தில் அணியை எப்படி வழிநடத்துகிறார் என்று பார்க்கவேண்டாம். அதில் இன்னும் அவர் மெருகேறவில்லை. அந்த விஷயங்களில் கோலி விமர்சனங்களுக்கு உட்பட்டவர்தான். அது மட்டுமல்ல அவர் அடிக்கும் பந்து பௌண்டரியை நெருங்குவதை, பிட்சுக்கு நடுவே ஓடுவதை, சதம் அடிப்பதை, அதைக் கொண்டாடுவதை... அதையும்கூடப் பார்க்கவேண்டாம். `வைட் ஆங்கிள் லென்ஸ்' கொண்டு அவரை ஒவ்வொரு தளத்திலும் பார்த்து விமர்சிக்கவேண்டாம். அந்த பேட்டிங் கிரீஸுக்குள்... அந்த வெள்ளைக் கோடுகளுக்கு நடுவே கோலியைப் பாருங்கள். அங்கு விராட் கோலியை வெறுமனே பார்க்க மட்டும் முடியாது. ரசிக்கவும் கொண்டாடவும் மட்டுமே முடியும். 

கோலி

விராட் அடிக்கும் கவர் டிரைவ் ஒவ்வொன்றும் அதி அற்புத ஓவியம். யார் அடித்தாலும் கவர் டிரைவ் அழகாகத்தான் இருக்கும். ஆனால், கோலியின் சில கவர் டிரைவ்கள் இன்னும் கூடுதல் ஸ்பெஷல். கவர், எக்ஸ்ட்ரா கவர் ஃபீல்டர்கள் இருவருக்கும் நடுவே `ட்ரேசர் புல்லட்'டாகச் செல்லுமே - அது பெரிய அழகல்ல... வலது காலை பலமாக ஊன்றி, இடது காலை கொஞ்சம் விலக்கி, வலது முழங்காலை சாய்ந்த `7' போல் வளைத்து அடிப்பாரே - அதுகூட இல்லை... பந்தை அடித்ததும், முழங்கை வளையாமல் பேட்டும், கையும் சேர்ந்து வட்டம் வரையும் காம்பஸ் போல் அழகாக ஒரே வட்டப் பாதையில் தோள்வரை உயரும் அந்த Follow through... அதுதான் அழகு... பேரழகு..! மிக சொச்ச வீரர்களிடமே பார்க்க முடிந்த அற்புதம் அது. இன்றைய காலகட்டத்தில் வேறு யாரிடமும் இல்லாத அதிசயம் அது!

அதுமட்டுமல்ல, ஆன் சைட் அடிக்கும் அந்த ஃப்ளிக் ஷாட்டுக்குக்கூட இவரால் அழகூட்ட முடியும். பந்தை அடிக்கும்போது பேட், மணிக்கட்டு, கண் எல்லாம் ஒரே நேர்கோட்டில் இருக்கும். மணிக்கட்டை அவர் பயன்படுத்தும் விதம் ரசிப்பையும் கடந்து, மிகப்பெரிய ஆச்சர்யத்தை உண்டாக்கும். சாதாரணமாக ஒரு பேட்ஸ்மேன் டிரைவ் ஆடும்போதும், ஸ்லாக் அடிக்கும்போதும் அவர்களின் மொத்த பாடி லேங்குவேஜும் மாறும். பேட் நன்றாக உயர்ந்து வரும். முழங்கை மடங்குவது வேறுபடும். ஆனால், கோலி..! அத்தனை வேறுபாடுகளையும் அவர் மணிக்கட்டுகளே செய்துவிடும். டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெதிரான ஐ.பி.எல் போட்டியில், கோரி ஆண்டர்சன் பந்தில் கவர் டிரைவ் மூலம் ஒரு சிக்ஸர் அடித்திருப்பார் கோலி. வழக்கமான அதே கவர் டிரைவ். வழக்கமான பேட் ஸ்விங். வழக்கமான ஃபாலோ த்ரூ... ஆனால், அந்த இரண்டுக்கும் இடையில், மணிக்கட்டுகளின் அசைவு அதை சிக்ஸராக்கியிருக்கும். கோலி - சாதாரண ஓவியன் கிடையாது. அது சாதாரண தூரிகை கிடையாது. விந்தைகள் செய்யத் தெரிந்த மாயத் தூரிகை அவனுடையது!

விராட்

கோலி சாதாரண மெஷின் இல்லை...

கோலி மெஷினே இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. ஒருவகையில் அவர் வியக்கவைக்கும் எந்திரன்தான். ஆனால், அவர் எல்லோரும் குறிப்பிடுவதுபோன்ற மெஷின் இல்லை. ஒரு வேலையை ஓயாமல் செய்துகொண்டிருக்கும் அந்தக் காலத்து சாதாரண மெஷின் இல்லை அவர். இவர் வேற மாதிரி. ஏனெனில், எல்லா எந்திரங்களும் தொடர்ந்து துல்லியமாக வேலை செய்யாது. பழுதுகளை தானாகக் கண்டறிந்து சரிசெய்யாது. அதை AI மெஷின்களால் மட்டுமே செய்ய முடியும். Trouble shooting செய்வதில் கோலியைப் போல் இன்று கிரிக்கெட் உலகில் எவருமே இல்லை. 

ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் ஒரு பலவீனம் இருக்கும். ஒருவருக்கு ஷார்ட் பால் ஆட வராது, ஒரு பேட்ஸ்மேனால் ஸ்விங்கைக் கணிக்க முடியாது, சிலருக்கு ஸ்பின் ஆடுவது கடினமாக இருக்கும், சிலருக்கு ஸ்டம்ப் லைன் பந்துகளை ஆடுவதே சவாலாக இருக்கும். எல்லோருக்குமே ஒரு `வீக் ஸ்பாட்' இருக்கத்தான் செய்யும். ஆனால், அதை அவர்கள் எப்படிச் சரிசெய்துகொள்கிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் அவர்களின் வளர்ச்சி அமையும். இன்று மற்ற எல்லா பேட்ஸ்மேன்களையும் விட கோலி மிகப்பெரிய வளர்ச்சி கண்டிருப்பது அதனால்தான். தொடக்கத்தில் ஆஃப் சைட் ஆடுவதற்குச் சிரமப்பட்டார். பின்னர், ஷார்ட் பால்களை சரியாகப் புல் செய்ய முடியாமல் ஆட்டமிழந்தார். 2014 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே நகர்ந்து செல்லும் பந்துகளை அடிப்பதில் தொடர்ந்து தடுமாறினார். கோலியின் ஆட்டத்தில் நிறைய பிரச்னைகள் இருந்தன. 

விராட்

இன்றைய காலகட்டத்தில் கிரிக்கெட் வீரர்களுக்குப் பெரிதாக இடைவெளிகள் கிடைப்பதில்லை. விஜய் ஹசாரே முடிந்து, சில நாள்களில் துலீப் டிராபி, இந்தியா ஏ சுற்றுப்பயணம்... அது நடக்கும்போதே ரஞ்சி சீசன், அது முடிந்தால் இராணி கோப்பை, சையது முஷ்தாக் அலி. அனைத்துக்கும் நடுவில் ஐ.பி.எல். இப்படி ஒவ்வொரு வீரரும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். அதற்கு நடுவே கிடைக்கும் இடைவெளி ஓய்வுக்கே போதாது. இதில் எங்கிருந்து தங்களின் தவறுகளை முற்றிலும் சரிசெய்வது கஷ்டம்தான். கொஞ்சம் கொஞ்சமாக அதையெல்லாம் சரிசெய்ய குறைந்தபட்சம் ஆறேழு மாதங்கள் ஆகிவிடும். ஆனால், கோலி மட்டும் ஒவ்வொரு பிரச்னையையும் உடனுக்குடன் சரிசெய்துகொண்டே இருந்தார். 

2011 உலகக் கோப்பைக்குப் பிறகு ஆஃப் சைடில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார். 2014 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் புல் ஷாட் பிரச்னையோ, ஆஃப் சைட் தடுமாற்றமோ அவரிடம் இல்லை. இந்த ஆண்டு இங்கிலாந்து செல்லும்போது அன்று இருந்த `அவுட் ஸ்விங்' பிரச்னையும் அவரிடம் இல்லை. அதைச் சரிசெய்ய அவர் 4 ஆண்டுகளெல்லாம் எடுத்துக்கொள்ளவில்லை. 2015 உலகக் கோப்பைக்குப் பிறகே `flawless' பேட்ஸ்மேன் ஆகிவிட்டார் விராட். தான் கிரீஸுக்குள் செய்யும் அத்தனை தவறுகளையும், தனக்கு இருந்த சிரமங்களையும் உடனுக்குடன் சரிசெய்துகொண்டே இருந்தார். அதுதான் இன்று அவரை உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக உயர்த்தியுள்ளது. 

விராட்

இந்தத் தவறுகளைத் திருத்திக்கொள்வதற்காக, கோலி தன் பேட்டிங்கில் தானே பல கோட்பாடுகளை வகுத்துக்கொண்டார். அவர் ஷார்ட் பால் ஆடுவதைப் பார்த்தாலே அது தெரியும். மற்ற வீரர்கள் ஷார்ட் பால் ஆடும்போது, Bat face முழுதையும் பந்தை நோக்கிச் செலுத்துவார்கள். சில சமயம் பௌண்டரி எல்லையைத் தாண்டும். சில சமயம் எட்ஜாகும், இல்லை எல்லையில் கேட்ச் ஆகும். ஆனால், கோலி அப்படியில்லை. ஷார்ட் பால்களை எப்போதும் `கிராஸ் பேட்' கொண்டுதான் ஆடுவார். ஃபைன்லெக் அம்பயரைத் தாண்டும் முன்பே பந்து மைதானத்தில் பிட்சாகிவிடும். கேட்சாக வாய்ப்பே இல்லை. அந்தப் பந்து வேகமாக வந்தாலும் சரி, மெதுவாக வந்தாலும் சரி... டீப் ஃபைன் லெக் ஃபீல்டர் இருந்தாலும் சரி, இல்லாவிடிலும் சரி, அப்படி ஆட மாட்டார். ஷார்ட் பால்களை இப்படித்தான் ஆடவேண்டும் என்ற கோட்பாட்டை இந்த மெஷின் மாற்றிக்கொண்டதே இல்லை. 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் அப்படித்தான். என்னதான் ஆண்டர்சனின் அவுட் ஸ்விங் டெலிவரிகளுக்குத் தயாராகப் போயிருந்தாலும், எட்க்பாஸ்டன் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ஒரு கவர் டிரைவ்கூட ஆடவில்லை அவர். தன் ஃபேவரிட் ஷாட்தான். ஆனால், அங்கு தன் தவற்றைத் திருத்தவேண்டுமே?! 225 பந்துகளில் கவர் டிரைவ் ஆடவே இல்லை. தான் வகுத்த கோட்பாடுகளைக் கடைபிடிப்பதில்தான் கோலி மெஷின். தன் தவறுகளை உடனுக்குடன் trouble shoot செய்து, அதைச் சரிசெய்துகொள்வதில்தான் அவர் மெஷின். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 4-வது ஒருநாள் போட்டி - இந்த ஆண்டு தன் கோட்பாடுகளைப் பின்பற்றாமல் கோலி ஆடிய ஒரே போட்டி. அந்தத் தொடரில் சதமடிக்காமல் அவுட்டான ஒரே போட்டி. அவுட் ஆவதற்கு முன்பே கொஞ்சம் தடுமாறத்தான் செய்தார். கீமர் ரோச் வீசிய ஷாட் பாலை, தவறாக அடித்தார். டீப் ஸ்கொயர் லெக் முன்புதான் பிட்சானது என்றாலும், அது கோலியின் ஷாட் இல்லை. தன் கோட்பாடுகளுக்கு உட்படாமல் கோலி இந்தாண்டு ஆடிய ஒரே ஆட்டம் அது. எப்பேர்ப்பட்ட மெஷினாக இருந்தாலும் கொஞ்சம் `ஹேங்' ஆகும்தானே! கோலி - 99 சதவிகித பெர்ஃபெக்ஷனோடு ஆடும் AI மெஷின்! 

விராட்

 

`ஹேம்லட் ஒரு குழுவால் உருவானது அல்ல. மோனா லிசா பல கலைஞர்கள் சேர்ந்து வரைந்தது அல்ல. மிகச் சிறந்த படைப்புகள் எதுவும் குழுக்களால் உருவானதில்லை. தனிநபரிடம் இருந்துதான் உருவாகின்றன. ஆகச்சிறந்த ஆற்றல் கடவுளின் விரல்களிலிருந்து அந்தத் தனியொருவனின் விரலை அடைகிறது' என்றார் ஆல்ஃப்ரெட் விட்னி கிரிஸ்வோல்ட் என்ற கல்வியாளர். இந்த வாக்கியத்தைப் பார்த்தால் கிரீம் ஸ்மித் சொன்னது சரிதானோ என்றும் தோன்றுகிறது. அந்த ஒரு வீரனால் கிரிக்கெட்டில் இனி சில மாற்றங்கள் நடக்கலாம். காத்திருப்போம்... இன்னொரு வகையில் பார்த்தால் கிரிக்கெட் கடவுளின் ஆகச்சிறந்த ஆற்றலை இப்போது தன் விரல்களில் சுமந்துகொண்டிருக்கும் ஓவியனும் இவர்தானோ! ஆம், விராட் கோலி - தூரிகையை ஆயுதமாகக் கொண்ட ஒரு AI மெஷின்! 


டிரெண்டிங் @ விகடன்