வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (06/11/2018)

கடைசி தொடர்பு:09:12 (07/11/2018)

தீபாவளிக்கு ரோஹித் ஷர்மாவின் கிஃப்ட் என்ன? - ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

ரோகித் ஷர்மா

Credits: BCCI

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடரை இந்தியா கைப்பற்றியுள்ள நிலையில் டி-20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டி லக்னோவில் இன்று நடைபெறுகிறது. லக்னோ மைதானத்தில் நடைபெறும் முதல் சர்வதேசப் போட்டி இதுவாகும். கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் மேற்கிந்திய தீவுகள் 109 ரன்களுக்குள் சுருண்டது. பொல்லார்ட், டேரன் பிராவோ, ஹெட்மயர் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். இதனால் அந்த அணியால் பெரிய அளவில் ரன்குவிப்பில் ஈடுபடமுடியவில்லை இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவிலே அவுட் ஆகி வெளியேறினார். தினேஷ் கார்த்திக் மற்றும் குருணல் பாண்ட்யா ஆகியோர் தங்களது பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். தினேஷ் கார்த்திக் ஒரு நாள் போட்டி போன்று ஆடினார். அவர் 34 பந்துகளில் 31 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மேற்கிந்திய பந்துவீச்சாளர்களும் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடுமையான நெருக்கடி கொடுத்தனர். இந்திய அணி 17-வது ஓவரில்தான் இலக்கை எட்டிப்பிடித்தது. இந்தியா டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது. இன்றையப் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றால் டி-20 தொடரைக் கைப்பற்றி மேற்கிந்திய தீவுகள் அணியை வொயிட் வாஷ் செய்து அனுப்பும். டி-20 போட்டியில் நடப்பு சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் அணி இன்றைய போட்டியில் பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளது. எனவே, இன்று நடைபெறும் போட்டியில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது. ரோஹித் ஷர்மா தான் டி-20 அணியை வழிநடத்துகிறார். எனவே, இந்தத் தீபாவளியை  அவர் தித்திப்பாக முடித்து வைப்பாரா என்ற ஆவலில் ரசிகர்கள் உள்ளனர்.