வெளியிடப்பட்ட நேரம்: 22:44 (06/11/2018)

கடைசி தொடர்பு:08:23 (07/11/2018)

ரோஹித் தலைமையில் புதிய சாதனை - டி20 தொடரும் இந்தியா வசமே!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.

photo credit: @icc

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட், ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், முதலாவது டி20 போட்டியிலும் இந்தியாவே வென்றது. இந்த நிலையில் இரண்டாவது டி20 லக்னோவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பௌலிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாகக் களத்தில் இறங்கிய ரோஹித் - தவான் இணை அதிரடி காட்டியது. இந்த இணையை, 13 ஓவரின் இறுதிப் பந்தில் ஆலன் பிரித்தார். சிக்ஸ் அடிக்க முயன்ற தவானின் பந்தை நிக்கோலஸ் தாவிப்பிடித்து ஆவுட் ஆக்கினார். இதனால் 43 ரன்களில் தவான் வெளியேறினார். 123 ரன்களுக்கு இந்தியா தனது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. இதையடுத்து ரோஹித் ஷர்மாவுடன் ரிஷப் பான்ட் கைகோத்தார். ஆனால், களமறங்கி 5 ரன்களை மட்டுமே சேர்ந்த ரிஷப் 6-வது பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

கேரி பியரி வீசிய பந்தை பான்ட் தூக்கி அடிக்க, ஹெட்மேயர் அதை லாகவமாகப் பிடித்தார். இதன்பின் கே.எல்.ராகுல் - ரோஹித் இணை ஆட்டத்தைத் தொடர்ந்தது. கடைசி ஓவர் நெருங்க அதிரடி ஆட்டம் காட்டிய ரோஹித் ஷர்மா 61 பந்துகளில் 111 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேரி பியரி,  ஆலென் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இதையடுத்து, 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஹோப் மற்றும் ஹெட்மேயரின் இணையை இரண்டாவது ஓவரிலேயே கலீல் அஹமது பிரித்தார். 

photo credit: @icc

இதேபோல் அடுத்தடுத்து வந்த வீரர்கள் இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால் அந்த அணியால் ரன்கள் சேர்க்க முடியவில்லை. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் டேரன் பிராவோவை தவிர மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து, 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரையும் இந்தியா கைப்பற்றியது. ரோஹித் தலைமையில் இந்தியா வெற்றி பெறும் 6 டி20 தொடர் இதுவாகும். அதேநேரம் தொடர்ச்சியாக 7-வது டி20 தொடரை இந்தியா கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க