வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (07/11/2018)

கடைசி தொடர்பு:19:00 (07/11/2018)

`ஒரே ஓவரில் 6 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 43 ரன்கள்!’ - நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் சாதனை

நியூஸிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் ஒரே ஓவரில் 43 ரன்கள் அடித்து அந்நாட்டு வீரர்கள் புதிய சாதனை படைத்திருக்கிறார்கள். 

சாதனை படைத்த நியூஸிலாந்து ஜோடி

Photo Credit: Twitter/@ndcricket

நியூஸிலாந்தின் நார்தன் டிஸ்ட்ரிக்ட்ஸ் மற்றும் சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணிகள் இடையிலான உள்ளூர் ஒருநாள் போட்டியில்தான் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ஹாமில்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த நார்தன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் சேர்த்தது. 314 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணியால் 50 ஓவர்களில் 288 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன்மூலம் நார்தன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நார்தன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள், ஜோ கார்ட்டர் மற்றும் பிரெட் ஹாம்ப்டன் ஆகியோர் வில்லியம் லூடிக் வீசிய ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உதவியுடன் 43 ரன்கள் குவித்தனர். லிஸ்ட் ஏ போட்டிகளில் இது உலக சாதனையாகும். இதற்கு முன்னதாக வங்கதேச பிரீமியர் லீக் தொடரில் ஷேக் ஜமால் தன்மோண்டி (Sheikh Jamal Dhanmondi) அணிக்காக விளையாடிய ஜிம்பாப்வே வீரர் எல்டன் சிகும்பரா, அபானி லிமிடெட் அணிக்கெதிரான போட்டியில் 39 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது. 
வில்லியல் வீசிய முதல் பந்தில் பவுண்டரி அடிக்கப்பட, அடுத்த இரண்டு பந்துகளை அவர் நோபாலாக வீசினார். 2 நோபால்கள் மற்றும் அதற்கு அடுத்த பந்து ஆகியவற்றில் தொடர்ச்சியாக 3 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது. மூன்றாவது பந்தில் ஒரு ரன் எடுக்கப்படவே, கடைசி 3 பந்துகளும் சிக்ஸர்களாகவே, அந்த ஓவரில் 43 ரன்களை நார்தன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணி குவித்தது. 

சர்வதேச கிரிக்கெட் போட்டியில், ஒரே ஓவரில் 36 ரன்கள் அடித்ததே இதுவரை சாதனையாக இருக்கிறது. ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை கடந்த 2007-ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் ஹெர்ஷல் கிப்ஸ் 36 ரன்கள் சேர்த்தார். டி20 போட்டிகளைப் பொறுத்தவரை 2007-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில், இந்திய வீரர் யுவராஜ் சிங், 6 சிக்ஸர்கள் உதவியுடன் 36 ரன்கள் எடுத்தது உலக சாதனையாக இருக்கிறது.