வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (08/11/2018)

கடைசி தொடர்பு:13:05 (08/11/2018)

ஐபிஎல் சீக்ரெட்ஸ் - இந்திய வீரர்கள் குறித்து வார்னே ஓப்பன் டாக்!

ஷேன் வார்னே தனது சுயசரிதை புத்தகத்தில், ஜடேஜா மற்றும் கைஃப் குறித்த சில தகவல்களைப் பதிவுசெய்துள்ளார்.

ஷென் வார்னே

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே, ‘நோ ஸ்பீன்’ என்ற தலைப்பில் சுயசரிதைப் புத்தகத்தை எழுதியுள்ளார். அதில், தனது ஐபிஎல் அனுபவங்கள், இந்திய வீரர்கள் ஜடேஜா, கைஃப் குறித்துப் பேசியுள்ளார்.  ஐபிஎல் முதல் சீசனில், ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்தபோது நடந்த சில நிகழ்வுகள்குறித்து தனது சுயசரிதைப் புத்தகத்தில் பதிவுசெய்துள்ளார். ரவீந்திர ஜடேஜாவுடனான சிறு சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார். ரவீந்திர ஜடேஜா பயிற்சிக்கு எப்போதும் லேட்டாகத்தான் வருவார். முதல் நாள் லேட்டாக வந்தார் விட்டுவிட்டோம். இரண்டாவது நாள் லேட்டாக வந்து பேருந்தைத் தவறவிட்டார். நாங்கள் மைதானத்திற்குச் சென்றுவிட்டோம். அவராக நேரடியாக மைதானத்திற்கு வந்தார். ஆனால் லேட்டாக வந்துசேர்ந்தார். பயிற்சி முடிந்து ஹோட்டலுக்குத் திரும்பியபோது, பேருந்தை பாதிவழியில் நிறுத்தச் சொன்னேன். நமது குழுவில் இன்றும் ஒருவர் தாமதமாக வந்துள்ளார். அவர் பேருந்தை விட்டு இறங்கி வீட்டுக்கு நடந்து செல்ல வேண்டும் என்றேன். அப்போது ஜடேஜாவின் நண்பர் ஒருவர் தகராறுசெய்தார் அவரையும் பேருந்தை விட்டு இறங்கி நடக்கச்சொன்னேன். அதன்பிறகு, அணியில் யாரும் தாமதமாக வருவதில்லை எனக் கூறியுள்ளார்.

அதேபோல, இந்திய அணியின் முன்னாள் வீரர் கைஃப் குறித்தும் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார், “ ராஜஸ்தான் ராயல் அணி வீரர்கள் அனைவருக்கும் தனியார் ஹோட்டலில் அறை ஒதுக்கியிருந்தனர். வீரர்கள் அனைவரும் ஹோட்டலுக்குச் சென்றவுடன், அவரவர் அறைக்கான சாவிகள் கொடுக்கப்பட்டது. அதைப் பெற்றுக்கொண்டு திரும்பினர். கைஃப் மட்டும் ஓட்டல் பணியாளர்களிடம் வாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அருகில் சென்று பார்த்தபோது, நான் யார் என்று தெரிகிறதா, நான் கைஃப் என்று பேசிக்கொண்டிருந்தார். அவரிடம் ஏதாவது பிரச்னையா என்றேன். ஆமாம், நான் கைஃப். எனக்கு சிறிய அறையை ஒதுக்கியிருக்கிறார்கள் என்றார். அப்போதுதான் புரிந்தது, முகமது கைஃப் இந்திய அணியில் சீனியர்... சர்வதேச கிரிக்கெட் வீரர். எனவே, தனக்குப் பெரிய அறை வேண்டும் என்பதைக் கேட்பதற்குத்தான் அவ்வாறு பேசியுள்ளார் என்பது தெரியவந்தது'' எனத் தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.