வெளியிடப்பட்ட நேரம்: 18:02 (08/11/2018)

கடைசி தொடர்பு:18:02 (08/11/2018)

`ஐ.பி.எல் தொடரில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு!’ - விராட் கோலி சொல்லும் லாஜிக்

ஐ.பி.எல் தொடரிலிருந்து இந்திய அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு தர வேண்டும் எனக் கோலி கோரிக்கை விடுத்துள்ளார். 

பும்ரா

கிரிக்கெட் உலகின் டாப் 10 அணிகள் மோதும் 50 ஓவர் உலகக்கோப்பைத் தொடர் 2019-ம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. இந்திய அணியும், தற்போது நடைபெறும் தொடர்கள் மூலம், உலகக்கோப்பைத் தொடருக்கான வீரர்கள் தேர்வை கவனத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. 

உலகக்கோப்பைத் தொடர் 2019-ம் ஆண்டு மே மாதம் 30-ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னதாக, ஏப்ரல் - மே மாதங்களில் ஐ.பி.எல் தொடர் நடைபெறுகிறது. ஐ.பி.எல் தொடர் மே மாதம் 3 வது வாரத்தில் நிறைவடையும். ஒரு வார இடைவெளியில், உலகக்கோப்பை இங்கிலாந்தில் தொடங்கும். இதனால் வீரர்கள், சோர்வடையும் வாய்ப்பும், காயங்களால் முக்கிய தொடரான உலகக்கோப்பைத் தொடரை மிஸ் செய்யவும் வாய்ப்புள்ளது. 

உலகக் கோப்பைக்குத் தயாராகும் விதத்தில் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பிசிசிஐ நிர்வாகக் குழு, கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்டோர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆஸ்திரேலியா தொடர், நியூசிலாந்து தொடர் மற்றும் உலகக்கோப்பைத் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதில் ஐ.பி.எல் மற்றும் கோலிஉலகக்கோப்பை தொடர் ஆகியவை அடுத்தடுத்து வருவது தொடர்பாகக் கோலி அச்சம் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

கூட்டத்தில் பேசிய விராட் கோலி, ``அடுத்தடுத்த தொடர்களால் வீரர்களின் பணிச்சுமை அதிகரிக்கும். குறிப்பாக, வேகப்பந்துவீச்சாளர்கள் மிகவும் சோர்வடைகிறார்கள். இதனால், உலக்கோப்பைத் தொடரை மனதில் வைத்து முக்கிய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஐ.பி.எல் தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட வேண்டும். குறிப்பாக, பும்ரா மற்றும் புவனேஷ்வர்குமார் இந்திய அணியின் முக்கிய வீரர்கள். அவர்கள் ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகுவது சிறந்த முடிவாக இருக்கும். இல்லை, அவர்கள் ஐ.பி.எல் தொடர் விளையாட வேண்டும் என்ற முடிவெடுத்தாலும், முதல் 7 அல்லது 8 போட்டிகளில் மட்டும் விளையாட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார். எனினும், `இந்தக் கோரிக்கை தொடர்பாக அந்தந்த வீரர்களின் அணி நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும். பிசிசிஐ எதுவும் செய்ய முடியாது’ என பிசிசிஐ தரப்பில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் ரஹானே, ரோஹித் ஷர்மா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.