வெளியிடப்பட்ட நேரம்: 20:55 (08/11/2018)

கடைசி தொடர்பு:20:55 (08/11/2018)

`இப்படியும் பந்து வீசலாமா...!’ - புருவம் உயர்த்தச் செய்த உ.பி. பௌலரின் 360 டிகிரி பந்துவீச்சு 

உத்தரப்பிரதேச அணியின் இடது கை சுழற்பந்துவீச்சாளர் ஷிவா சிங் 360 டிகிரி வரை சுழன்று வித்தியாசமான முறையில் பந்துவீசிய சம்பவம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

360 டிகிரி

23 வயதுக்குட்பட்டோருக்கான சி.கே.நாயுடு கோப்பை தொடர் கிரிக்கெட் போட்டிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் - 1 போட்டியில் பெங்கால் மற்றும் உத்தரப்பிரதேச அணிகள் மோதிய போட்டியில்தான் வித்தியாசமான பவுலிங் ஆக்‌ஷன் மூலம் கவனம் பெற்றுள்ளார் ஷிவா சிங். உத்தரப்பிரதேச அணியின் சுழற்பந்துவீச்சாளரான ஷிவா சிங், இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசும்போது 360 டிகிரியில் ஒருமுறைச் சுற்றி, தனது ரெகுலரான ஸ்டைலில் இருந்து மாறுபட்டு, வித்தியாசமாகப் பந்துவீசினார். அதைத் தடுத்து ஆடிய பேட்ஸ்மேனும் இது என்ன மாதிரியான பந்துவீச்சு என பார்த்துக்கொண்டிருக்க, இதை `டெட் பால்’ என அறிவித்தார் கள நடுவர். இதைத் தொடர்ந்து இது எப்படி டெட் பால் ஆகும் என அவரிடம் கேள்வியும் எழுப்பினார். கிரிக்கெட் போட்டியில் வித்தியாசமான ஆக்‌ஷன் கொண்ட பவுலர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், இதுவரை 360 டிகிரியில் சுற்றி யாரும் பந்து வீசியிருக்க மாட்டார்கள். 
 
இந்தப் பந்துவீச்சு குறித்து பிரபல கிரிக்கெட் இணையதள ஊடகமான ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்ஃபோ விடம்( ESPN Cricinfo) பேசிய ஷிவா சிங்,  `நான் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வித்தியாசமான ஸ்டைல்களில் பந்துவீசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். இந்தப் போட்டியிலும் இதைச் செய்யலாம் என நினைத்தேன், காரணம், அப்போது பெங்கால் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி பார்ட்னர்ஷிப் உருவாக்கி வந்தனர். அதனால் அப்படி வீசினேன். ஆனால், நடுவர் அதை டெட் பால் என்று அறிவித்துவிட்டனர். அதனால் அவரிடம், இது குறித்துக் கேட்டேன். 

விஜய் ஹசாரே தொடரில் கேரள அணிக்கு எதிராகவும் இதேபோன்று பந்து வீசினேன். பேட்ஸ்மேன்கள் ஸ்விட்ச் ஹிட், ரிவெர்ஸ் ஸ்வீப் என பல்வேறு யுத்திகளைப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராகக் கையாளுகிறார்கள். பந்துவீச்சாளர்கள் அதுபோன்று செய்தால், டெட் பால் என்கிறார்கள்’ என்றார் விரக்தியுடன்.