வெளியிடப்பட்ட நேரம்: 08:53 (09/11/2018)

கடைசி தொடர்பு:07:34 (10/11/2018)

பெண்கள் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்: நியூஸிலாந்துடன் மல்லுக்கட்டும் இந்தியா!

பெண்கள் டி-20  உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, மேற்கிந்தியத் தீவுகளில் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்தியா

பெண்களுக்கான 6-வது டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, மேற்கிந்தியத் தீவுகளில் இன்று தொடங்கி, வரும் 24-ம் தேதி வரை நடைபெறும். மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில், நடப்பு சாம்பியனான  மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.  ‘பி’பிரிவில், இந்தியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன. லீக் சுற்றுப் போட்டிகளில் அந்தந்தப் பிரிவுகளில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

உலகக்கோப்பைத் தொடரில் இன்று நடைபெறும் முதல் போட்டியில், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி, இரவு 8.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.  டி-20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய மகளிர் அணி பெரிய அளவில் வெற்றிகளைக் குவித்ததில்லை. இதுவரை நடைபெற்றுள்ள 6 உலகக்கோப்பை தொடர்களிலும் இந்தியாவின் செயல்பாடுகள் சிறப்பாக இல்லை. 2009, 2010-ம் ஆண்டுகளில் அரையிறுதியை எட்டியதே இந்தியாவின் சிறந்த நிலை. இந்தத் தொடரில் வலிமையான அணிகளாக ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் திகழ்கின்றன. இதில் நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ளன. இந்த அணிகளுக்கு எதிராக இந்திய அணி வெற்றிபெற்றால்தான் அரையிறுதிக்குத் தகுதிபெற முடியும்.  இந்தத் தொடரில் முதல்முறையாக நடுவரின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யும் டி.ஆர்.எஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. 

இந்திய அணி தனது பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. இந்தப் போட்டியில், ஹர்மன்பிரீத் கவுர் 32 பந்துகளில் 62 ரன்களைக் குவித்தார். இது, இந்திய அணி வீராங்கனைகளுக்கு நம்பிக்கை அளிக்கும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது. டி- 20 போட்டிகளில் எதுவும் நடக்கலாம். எந்த அணியையும் குறைவாக மதிப்பிடமுடியாது. ஒரு தனி நபரால்கூட ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியும். பல போட்டிகளில் அது நடந்துள்ளது. 

இந்திய அணி விவரம்:

ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிரிதி மந்தனா (துணை கேப்டன்), மிதாலி ராஜ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், வேதா கிருஷ்ணமூர்த்தி, தீப்தி ‌ஷர்மா, தான்யா பாட்டியா, பூனம் யாதவ், ராதா யாதவ், அனுஜா பட்டீல், எக்தா பிஷ்ட், ஹேமலதா, மன்சி ஜோஷி, பூஜா வஸ்ட்ராகர், அருந்ததி ரெட்டி.