வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (09/11/2018)

கடைசி தொடர்பு:12:10 (09/11/2018)

ஒரு ரன்னுக்காக 63 நாள்கள் காத்திருக்கும் தோனி! - ஆஸ்திரேலியா மண்ணில் சாதிப்பாரா?

ஒரு ரன்னுக்காக 63 நாள்கள் காத்திருக்கும் தோனி! - ஆஸ்திரேலியா மண்ணில் சாதிப்பாரா?

2018 ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணி அதிரடி `கம் பேக்’ கொடுத்தாலும், இந்திய அணியைப் பொறுத்தவரை இது தோனிக்கான ஆண்டு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. 

இந்த ஆண்டு, இதுவரை 13 இன்னிங்ஸில் விளையாடியுள்ள தோனி, 275 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். சராசரி 25-ஐ தாண்டவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது, அவரது ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

2020 டி-20 உலகக்கோப்பைக்கு இந்திய அணியைத் தயார்படுத்த வேண்டும். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதால், வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டி-20 தொடர்களில் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பி.சி.சி.ஐ-யின் இந்த முடிவுக்கு கிரிக்கெட் வட்டாரத்தில் விமர்சனங்களும் எழுந்தன. 

தோனி


எம்.எஸ்.டி இப்போது பேட்டிங் ஃபார்மில் இல்லாதபோதும், பல ஆண்டுகளாக இந்திய அணியின் மிடில் ஆர்டரை தாங்கிப் பிடித்ததில், அவருக்கு முக்கியப் பங்கு உள்ளது. 329 ஒருநாள் போட்டியில் பங்கேற்றுள்ள தோனி, இந்திய அணியின் லோயர்- மிடில் ஆர்டரில் களம் இறங்கி, 9,999 ரன்களை கடந்ததுதான் தோனியின் அதிரடி. அதிகபட்சமாக 183*, 9 செஞ்சுரிகள், 20 முறை ஆட்ட நாயகன், 6 முறை தொடர் நாயகன் என தோனி கடந்து வந்த பாதை அதகளம். இன்னும் 1 ரன் எடுத்தால், சர்வதேச போட்டிகளில் தோனி 10,000 ரன்களை கடந்தார் என்ற சாதனையை எட்டிவிடுவார். சச்சின், கங்குலி, டிராவிட், கோலி வரிசையில் இந்த சாதனையைச் செய்யும் ஐந்தாவது இந்திய வீரர். தோனியின் இந்த சாதனை நிறைவேற, இன்னும் 63 நாள்கள் காத்திருக்க வேண்டும். 

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணி, டெஸ்ட், டி-20, ஒரு நாள் தொடர்களில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஜனவரி 12-ம் தேதி நடைபெற உள்ளது. இந்திய அணியின் டாப் ஆர்டர் மெர்சலாக இருக்கும் நிலையில், மிடில் ஆர்டர் களம் இறங்குவதற்கான வாய்ப்பே இல்லாமல், போட்டியை முடித்துவிடுகின்றனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோனிக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தால், 2019-ம் ஆண்டில் தோனியின் 10,000 ரன் மைல்கல் உறுதியாகும்.

கடந்த ஓராண்டாக பேட்டிங்கில் சோபிக்கவில்லை என்றாலும். சிறந்த விக்கெட் கீப்பர், நெருக்கடியான சமயத்தில் சரியான முடிவு என ஃபீலிடில் தொடர்ந்து அசத்தி வருகிறார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரிலேயே, தோனியின் 10,000 ரன் சாதனை நிறைவேறியிருக்க வேண்டும். கொஞ்சம் லேட் ஆனாலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், ஆஸ்திரேலிய மண்ணில், இந்த சாதனை நிறைவேறும் என்று எதிர்பார்ப்போம்.