வெளியிடப்பட்ட நேரம்: 17:41 (09/11/2018)

கடைசி தொடர்பு:17:46 (09/11/2018)

`ஐ.சி.சி நடத்தும் தொடர்கள் மட்டும் ஓகேவா?!’ - பி.சி.சி.ஐ-க்குச் செக் வைக்கும் பாக். கிரிக்கெட் வாரியம்

இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இருநாட்டுத் தொடரை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் ஐ.சி.சி தலையிட வேண்டும் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள்

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இருநாட்டுத் தொடரில் விளையாடி 11 வருடங்கள் ஆகிவிட்டன. கடைசியாக 2007-ம் ஆண்டில் இரு அணிகளும் டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதன் பின்னர் 2008-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தொடர் தாக்குதல் மற்றும் குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பின்னர் இந்தியா, பாகிஸ்தானுடனான இருநாட்டுத் தொடரை தவிர்த்து வருகிறது. எனினும், ஐ.சி.சி நடத்தும் சர்வதேச தொடர்களில் மட்டும் இரு அணிகளும் மோதி வருகின்றன.

பல்வேறு காலகட்டங்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் இருநாட்டுத் தொடரை நடத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளும். ஆனால், மும்பை தாக்குதல் குற்றவாளிகளுக்குப் பாகிஸ்தான் அடைக்கலம் அளிப்பதாகக் கூறி இந்தியா திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஈஷான் மணி, இருநாடுகளுக்கிடையே கிரிக்கெட் தொடர்கள் நடத்த ஐ.சி.சி உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அவர் தனியார் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ``இது தொடர்பாக ஐ.சி.சி-யிடம் பலமுறை பேசியுள்ளேன். அனைத்து நாடுகளுடனான இருநாட்டு தொடர்களை ஐ.சி.சி உறுதி செய்ய வேண்டும். பாகிஸ்தான் அணியுடனான தொடரில் மட்டும் இந்தியா விளையாடாது என்றால், ஐ.சி.சி தொடர்களில் மட்டும் ஏன் விளையாடுகிறார்கள்?. பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என்று நம்புகிறோம். கிரிக்கெட் விளையாட நாங்கள் யாரிடமும் கெஞ்சவில்லை. மாறாக, சமமாக அமர்ந்து பேச விரும்புகிறோம்” என்றார். 

அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது. இறுதியாக இந்தியா பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பைத் தொடரில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.