வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (09/11/2018)

கடைசி தொடர்பு:20:40 (09/11/2018)

287 நாள்களுக்குப் பிறகு முதல் வெற்றி... ஆஸ்திரேலியா ரிடர்ன்ஸ்! #AusvSA

287 நாள்களுக்குப் பிறகு முதல் வெற்றி... ஆஸ்திரேலியா ரிடர்ன்ஸ்! #AusvSA

தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளில் தோல்வியை சந்தித்து வந்த ஆஸ்திரேலிய அணி, 287 நாள்களுக்குப் பிறகு முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்ரிக்க அணி, ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலாவது போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அசத்தல் வெற்றி பெற்றது. இன்று, அடிலெட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில், 7 ரன் வித்தியாசத்தில் போராடி வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்தது. 

ஆஸ்திரேலியா அணி


இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.  ஸ்டைன், ரபடா, ப்ரிடோரியஸின் வேகப்பந்து வீச்சுக்குத்  தாக்குப்பிடிக்காத ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். மார்ஷ் (22), கிறிஸ் லின் (44), அலெக்ஸ் காரே (47) ஆகியோரின் மூன்று விக்கெட்டுகளும் விக்கெட் கீப்பர் டிகாக் கைகளில் சிக்க, ரபடாவின் பந்துவீச்சில் ஆஸ்திரேலியாவின் ரன் வேட்டைக் கட்டுக்குள் வந்தது. 54 ரன்கள் கொடுத்து  நான்கு விக்கெட்டுகள் வீழ்த்திய ரபடா, 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ப்ரிடோரியஸ் ஆகியோரின் பந்துவீச்சால் 231 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா. 

வேகப்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் தென்னாப்பிரிக்காவின் சேஸிங்கின் போதும் தொடர்ந்தது. டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்களான டிகாக், ஹெண்ட்ரிக்ஸ், மர்க்ரம் ஆகியோரை ரன் எடுக்க விடாமல் பெவிலியனுக்கு அனுப்பினர் ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்கள். 20 ஓவர்கள் முடிவில், ஆஸ்திரெலியா 96/2 எனவும், தென் ஆப்ரிக்கா 95/4 என்ற நிலையிலும் இருந்தன. டு ப்ளெசிஸ் (47), மில்லர் (51) மட்டும் அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், மார்கஸ் ஸ்டோனிஸின் விக்கெட்டுகள் தென் ஆப்ரிக்காவின் வேகத்தைக் குறைத்தது. 50 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பரபரப்பான போட்டியின் முடிவில், 7 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர். நவம்பர் 11-ம் தேதி நடைபெறும் கடைசி ஒரு நாள் போட்டியில், தொடரை கைப்பற்றும் அணி எது என்பது தெரியும்.