`மகளிர் உலகக் கோப்பையில் அதிகபட்ச ஸ்கோர்!’ - கேப்டன் கவுர் சதத்தால் இந்திய அணி சாதனை | India post 194/5 in WWT20 match against NZ

வெளியிடப்பட்ட நேரம்: 22:15 (09/11/2018)

கடைசி தொடர்பு:00:54 (10/11/2018)

`மகளிர் உலகக் கோப்பையில் அதிகபட்ச ஸ்கோர்!’ - கேப்டன் கவுர் சதத்தால் இந்திய அணி சாதனை

நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 உலகக் கோப்பைப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. 

ஹர்மன்ப்ரீத் கவுர்

Photo Credit: Twitter/@WorldT20

இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை மகளிர் டி20 தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. சர்வதேச டி20 தரவரிசையில் 5 வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, தனது முதல் போட்டியில் 2வது இடத்தில் இருக்கும் நியூசிலாந்தைச் சந்தித்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்யத் தீர்மானித்த இந்திய மகளிர் அணியின் இன்னிங்ஸை தனியா பாட்டியா மற்றும் ஸ்மிர்தி மந்தனா ஆகியோர் தொடங்கினர். இந்த ஜோடி நீண்டநேரம் நிலைக்கவில்லை. இரண்டாவது ஓவரில் 9 ரன்கள் எடுத்த நிலையில், தனியா பாட்டியா ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்திலேயே ஸ்மிர்தி மந்தனாவும் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தமிழக வீராங்கனை ஹேமலதா 15 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய மகளிர் அணி 5.4 ஓவர்களில் 40 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து கைகோத்த ஜெர்மியா ரோட்ரிக்ஸ் மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஜோடி நியூசிலாந்து பந்துவீச்சை எளிதாகச் சமாளித்து விளையாடியது. ஹர்மன்ப்ரீத் அதிரடி காட்ட, இந்திய அணியின் ஸ்கோர் மிக வேகமாக உயர்ந்தது. 5வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 134 ரன்கள் குவித்தது. 49 பந்துகளில் சதமடித்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், 51 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோட்ரிக்ஸ் 59 ரன்கள் எடுத்து வெளியேறினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் இதுவே அதிகபட்ச ஸ்கோராகும். நியூசிலாந்து தரப்பில் லியா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.