வெளியிடப்பட்ட நேரம்: 02:13 (10/11/2018)

கடைசி தொடர்பு:11:00 (10/11/2018)

அறிமுக போட்டியில் கலக்கிய `சென்னை பொண்ணு'! - டி20 போட்டியில் இந்தியா வெற்றி #NZvIND #WT20

நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

தயாளன் ஹேமலதா

இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை மகளிர் டி20 தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. சர்வதேச டி20 தரவரிசையில் 5வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, தனது முதல் போட்டியில் 2வது இடத்தில் இருக்கும் நியூசிலாந்தைச் சந்தித்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்யத் தீர்மானித்த இந்திய மகளிர் அணியின் இன்னிங்ஸை தனியா பாட்டியா மற்றும் ஸ்மிர்தி மந்தனா ஆகியோர் தொடங்கினர். இந்த ஜோடி நீண்டநேரம் நிலைக்கவில்லை. ஆனால் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடியாக விளையாடினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் மிக வேகமாக உயர்ந்தது. 49 பந்துகளில் சதமடித்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், 51 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோட்ரிக்ஸ் 59 ரன்கள் எடுத்து வெளியேறினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் இதுவே அதிகபட்ச ஸ்கோராகும். நியூசிலாந்து தரப்பில் லியா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.   

இதன்பின் இமாலய இலக்கை நோக்கிக் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்குத் தொடக்க வீரர் பேட்ஸ் ஆறுதல் அளித்தார். அதிரடியாக ஆடிய பேட்ஸ் 67 ரன்கள் குவித்தார். அதேநேரம் மற்ற வீரர்கள் சொதப்பினர். இந்திய பௌலர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை எடுத்து வந்தனர். இதனால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்து நியூசிலாந்து தோல்வியை தழுவியது. இந்திய அணி தரப்பில் தமிழகத்தைச் சேர்ந்த தயாளன் ஹேமலதா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதேபோல் பூனம் யாதவ் 3 விக்கெட்டுகளும், ராதா யாதவ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். ஹேமலதா சென்னையைச் சேர்ந்தவர். சென்னை எம்.ஓ.பி வைஷ்ணவ கல்லூரியில் தான் படித்து வருகிறார். ஆல் - ரவுண்டரான இவர் இன்று தான் டி20 போட்டியில் முதல்முறையாக அறிமுகமானார்.  தனது அறிமுக போட்டியில் பேட்டிங், பௌலிங்கிலும் அசத்தியுள்ளார். 7 பந்துகளில் இரண்டு பவுண்டரிகளுடன் 15 ரன்கள் குவித்த அவர், 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்கள் வீழ்த்தினார். தொடக்க ஆட்டக்காரர் பீட்டர்சன், நியூசிலாந்து கேப்டன் ஏமி சட்டர்த்வெயிட் என முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க