வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (10/11/2018)

கடைசி தொடர்பு:14:45 (10/11/2018)

``கிரிக்கெட்டுக்கு முன்னால ரூ. 35 சம்பளத்துக்கு வேலை பார்த்தேன்” - ஓய்வை அறிவித்த முனாப் படேல் உருக்கம்

முனாஃப் படேல். கிரிக்கெட் பார்க்கும் 90s கிட்ஸ் அனைவருக்கும் பரிச்சயமான பெயர். 2011 ஆண்டுக்குப் பின் சர்வதேச தொடர்களில் பங்கேற்காத இவர். ஐ.பி.எல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் ஆடி வந்தார். 35 வயதான அவர் இன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். ``தோனியைத் தவிர என்னோடு ஆடிய அனைவரும் ஓய்வை அறிவித்துவிட்டனர், நான் இப்போது ஓய்வை அறிவிப்பதைக்கூட தாமதமாக கருதுகிறேன்" என்று கூறியுள்ளார். 

தனது ஓய்வு பற்றிய முடிவை தனது நெருங்கிய நண்பரான இஸ்மாயிலிடம் கலந்து ஆலோசித்தப் பின்னரே எடுத்துள்ளதாக தெரிவித்த படேல், ``ஓய்வை அறிவிப்பதற்கு ஏதும் குறிப்பிட்ட காரணங்கள் இல்லை, வயதாகி விட்டது. இளம் வீரர்கள் பலர் சிறப்பாக செயல்படுகின்றனர். முக்கியமாக எனக்கான உந்துசக்தியை யாரிடம் இருந்தும் பெறவில்லை. 2011 உலகக் கோப்பை வென்ற அணியில் விளையாடியதைப் பெருமையாகக் கருதுகிறேன். என் வாழ்நாளுக்கும் அந்தப் பெருமை போதும்" என்றும் முனாஃப் படேல் கூறினார்.

2011-ல் இந்தியாவின் பௌலிங் கோச் எரிக் சிம்மன்ஸ், முனாஃப் படேலை உலகக் கோப்பையின் அன்சங் (unsung) ஹீரோ என்று புகழ்ந்துள்ளார்.

``கிரிக்கெட்டுக்கு வருவதற்கு முன்பு வெறும் 35 ரூபாய் சம்பளத்துக்கு 8 மணி நேரம் வேலை பார்த்தேன். கிரிக்கெட் இல்லையெனில் இன்றும் எங்கேனும் இதேபோல் ஒரு வேலையைத் தான் செய்துகொண்டிருப்பேன். என் வாழ்வின் முன்னேற்றத்துக்கு அடிப்படை காரணமான கிரிக்கெட்டுக்கு என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்" என்று உணர்ச்சி மிகுந்த வார்த்தைகளில் கூறினார்.

ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக ஷேன் வார்னேயோடு சேர்ந்து ஆடிய முனாஃப்பை பற்றி வார்னே தனது புத்தகமான ' நோ ஸ்பின்'னில் ' அதிக நகைச்சுவை உணர்வும், அழகான இதயமும் கொண்ட சில வீரர்களில் முனாஃப் எனக்கு மிகவும் பிடித்தவர்" என்று குறிப்பிட்டுள்ளார். ஓய்வுக்குப் பிறகு துபாயில் நடக்கும் டி10 லீக்கில் பங்கேற்க உள்ள முனாஃப் பயிற்சியாளராக தொடர விருப்பம் தெரிவித்துள்ளார்.