வெளியிடப்பட்ட நேரம்: 16:34 (10/11/2018)

கடைசி தொடர்பு:16:34 (10/11/2018)

49 பந்துகளில் சதம்... டெத் ஓவரில் ஸ்ட்ரைக் ரேட் 305.88... ஹர்மன்ப்ரீத் சரவெடி!

49 பந்துகளில் சதம்... டெத் ஓவரில் ஸ்ட்ரைக் ரேட் 305.88... ஹர்மன்ப்ரீத் சரவெடி!

களிர் டி20 உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீஸில் நேற்று தொடங்கியது. ஆண்கள் கிரிக்கெட்டுடன் ஒப்பிடும் போது, மகளிர் கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் குறைவு. நியூசிலாந்துக்கு எதிரான தொடக்க போட்டியில், 49 பந்துகளில் சதம் விளாசிய இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், கிரிக்கெட் ரசிகர்களைத் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. நியூசிலாந்தின் தஹுஹு பந்துவீச்சில், தொடக்க வீராங்கனைகள் பாடியா (9), மந்தானா (2), ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது ஏமாற்றம். மூன்றாவதாகக் களமிறங்கிய தமிழக வீராங்கனை ஹேமலதா, 15 ரன்களுக்கு வெளியேற, 5.4 ஓவர்களில் 40/3 என இந்திய அணி தடுமாறியது.

நான்காவது இடத்திலும் அனுபவமிக்க வீராங்கனை மித்தாலி ராஜ் இறங்காத நிலையில், பேட்டிங் ஆர்டரில் மாற்றங்கள் செய்யப்பட்டது குறித்த கேள்விகள் எழுந்தன. ஆனால், இளம் வீராங்கனை ஜெமிமா ராட்ரிக்ஸூடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

ஒரு முனையில் ஜெமிமா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்க, மற்றொரு முனையில் அதிரடி மோடில் விளையாடத் தொடங்கினார் ஹர்மன்ப்ரீத் கவுர். 9.2 ஓவர்களில், 66/3 என்ற நிலையில் இந்தியா இருந்த போது, ஜெஸ் வாட்கின் பந்தை எதிர்கொண்ட கவுர், 71 மீட்டர் தூரத்தில் சிக்சரை தெறிக்கவிட்டார். 2018 மகளிர் டி20 உலகக் கோப்பையின் முதல் சிக்சர் இது! நியூசிலாந்து அணிக்குக் கடினமான சேஸிங்காக அமைய, சிறந்த இலக்கை நிர்ணயிக்க வேண்டியது இந்தியாவுக்கு அவசியம். சரியான நேரத்தில், ரன் வேட்டையைத் தொடங்கிய கவுர், சதம் அடிக்கும் வரை நிற்கவில்லை.

ஹர்மன்ப்ரீத் கவுர்

34 பந்துகளில் அரை சதம் கடந்த கவுர், அடுத்த 50 ரன்களை மின்னல் வேகத்தில் எடுத்தார். வாட்கின் பந்துகளை மிட்-விக்கெட் பவுண்டரிகளில் சிக்சர்களாக பறக்கவிட்டு, 7 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்தார். டெத் ஓவர்களில் கவுரின் ஸ்ட்ரைக் ரேட் 305.88! ஈஸியாக பவுண்டரிகளை விளாசிய கவுர், வெறும் 17 பந்துகளில் இரண்டாவது அரை சதத்தை கடந்தார்.

ஐந்தாவதாகக் களமிறங்கிய கவுர், 13 பந்துகளில் வெறும் 5 ரன்கள் எடுத்து, திடீரென ரன் குவிப்பில் ஈடுபட்டதை நியூசிலாந்து வீராங்கனைகள் கணித்திருக்க வாய்ப்பில்லை. போட்டி முடிந்தவுடன் செய்தியாளர்களிடம் பேசிய கவுர் “பொறுமையாக ஆட்டத்தைத் தொடங்கி, இன்னிங்ஸ் பில்ட் செய்வது என்னுடைய வழக்கம். கண்டிப்பாகச் சிறந்த ஸ்கோரை அடைய முடியும் என்ற நம்பிக்கை இருந்தது” என்றார்.

8 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் உள்பட வெறும் 51 பந்துகளில் 103 ரன்கள் எடுத்த கவுர், மகளிர் டி20 போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையும், டி20 உலகக் கோப்பையில் சதம் அடித்த மூன்றாவது வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றார். ஒரே போட்டியில், அதிக சிக்சர்கள் அடித்த வீராங்கனைகளின் பட்டியலில் இரண்டாவது இடமும் பிடித்தார். கவுர், ஜெமிமாவின் அதிரடியால் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 194 ரன்கள் எடுத்த இந்திய அணி, மகளிர் உலகக்கோப்பை வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை கடந்து சாதனை படைத்தது. இதற்கு முன்பு, 2014-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான போட்டியில், ஆஸ்திரேலிய அணி எடுத்த 191 ரன்களே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

2009-ம் ஆண்டு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் கவுர் அறிமுகமானார். 2012-ல் இந்திய டி20 அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.  ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்திய அணி, 2016 டி20 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில், வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன்ஷிபை தட்டிச்சென்றது. பேட்டிங்கில் மிரட்டல், ஃபீல்டிங்கில் கில்லி, அப்பப்போ பெளலிங், பொறுப்பான கேப்டன் என எல்லாமுமாய் இருக்கும் கவுர், தொடர்ந்து பல சாதனைப் பட்டியல்களில் இடம் பிடிக்க வாழ்த்துகள்!


டிரெண்டிங் @ விகடன்