குப்பையில் கண்டெடுக்கப்பட்ட ஜடேஜாவின் `பிளாஸ்டிக்’ மேன் ஆஃப் தி மேட்ச்! - கொந்தளிக்கும் சூழலியல் ஆர்வலர்கள் | The man of the match board was found along with waste

வெளியிடப்பட்ட நேரம்: 17:08 (10/11/2018)

கடைசி தொடர்பு:17:13 (10/11/2018)

குப்பையில் கண்டெடுக்கப்பட்ட ஜடேஜாவின் `பிளாஸ்டிக்’ மேன் ஆஃப் தி மேட்ச்! - கொந்தளிக்கும் சூழலியல் ஆர்வலர்கள்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியாக நாளை சென்னையில் 3-வது மற்றும் இறுதி டி20 போட்டி நடைபெறவுள்ளது. 

ஜடேஜாவுக்கு வழங்கப்பட்ட விருது

Photo Credit: Prakruthi

நவம்பர் 1 - தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 5-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் அபாரமாகப் பந்துவீசிய ஜடேஜா, 4 விக்கெட்டுகள் சாய்த்து ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று மைதானத்துக்கு வந்த யாரும் ஜடேஜாவின் பந்துவீச்சை மறந்திருக்க மாட்டார்கள். போட்டிக்குப் பின்னர் ஜடேஜாவுக்கு ஒரு லட்சம் மதிப்பிலான காசோலை வழங்கப்பட்டது. அதற்கான மாதிரி அட்டையும் அப்போது வழங்கப்பட்டது. இது அனைவருக்கும் தெரிந்ததே. அட்டையில் குறிப்பிட்ட பணமும் ஜடேஜா கணக்கில் செலுத்தப்பட்டிருக்கும். ஆனால், அந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட அந்த அட்டையின் நிலை என்ன?

அது தற்போது ஜெயன் என்னும் துப்புரவு தொழிலாளியிடம் உள்ளது. அவர் தான் தற்போது ஆட்டநாயகன் என்கிறது கேரளாவைச் சேர்ந்த அரசு சாரா சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்று. `ப்ரக்ருதி'  சுற்றுச்சூழல் அமைப்பின் முகநூல் பக்கத்தில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில் 5-வது ஒருநாள் போட்டியில் ஜடேஜா தனது கையால் வாங்கிய ஆட்டநாயகனுக்கான விளம்பர அட்டையைக் குப்பைகளை அகற்றும் ஜெயன் என்பவர் வைத்திருக்கிறார். 

அந்தப் புகைப்படத்துடன் சில கேள்விகளும், யோசனைகளும் கிரிக்கெட் நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில், ``போட்டியில் ஜொலித்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகனுக்கான பரிசுத்தொகை விளம்பரத்துக்காக பிளாஸ்டிக் அட்டையில் காண்பிக்கப்படுகிறது. இதற்கு பிளாஸ்டிக் அல்லாத மாற்று வழியை பி.சி.சி.ஐ யோசிக்கலாமே. தற்போது அந்த விருது ஜெயன் என்ற திருவனந்தபுரம் மாநகராட்சி துப்புரவுப் பணியாளரிடம் உள்ளது. போட்டிக்குப் பிறகு, குப்பைகளை அள்ளும்போது அவருக்கு இது கிடைத்திருக்கிறது” என பதிவிடப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பதிவில், பி.சி.சி.ஐ, கேப்டன் கோலி, முன்னாள் கேப்டன் தோனி, ஆட்டநாயகன் விருதை வென்ற ஜடேஜா, கேரளா கிரிக்கெட் சங்கம் உள்ளிட்ட பலரை டேக் செய்துள்ளனர். 

அதிக அளவில் ஷேர் ஆன இந்தப் பதிவு தொடர்பாகப் பலரும் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர். பி.சி.சி.ஐ மாற்று வழியில் வீரர்களுக்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும் எனக் கூறி வருகின்றனர்.