வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (11/11/2018)

கடைசி தொடர்பு:09:10 (11/11/2018)

‘சேப்பாக்கத்தில் சாதிப்பாரா ரோகித்!’- ஆறுதல் வெற்றிக்கு போராடும் மே.இ.தீவுகள்

 இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடைபெறுகிறது.

ரோகித்

Credits: BCCI

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்கள் முடிவடைந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி-20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா அணி  5விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோவில் நடைபெற்ற இரண்டாவது போட்டில் 71 வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி-20 போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இவ்விரு அணிகளும் மோதும் போட்டி இன்று இரவு 7 மணிக்குத் தொடங்குகிறது. இந்தப்போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றால் மேற்கிந்திய தீவுகள் அணியை வொயிட் வாஷ் செய்து அனுப்பும். தீபாவளியன்று லக்னோவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ரோகித் ஷர்மா பட்டாசாய் வெடித்தார். ரன் மழை பொழிந்த ரோகித் டி-20 போட்டிகளில் தனது 4-வது சதத்தை பதிவுசெய்தார். 

இன்றைய போட்டியில் அதுபோல் ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினால் டி-20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சிறப்பை பெறுவார். தற்போது ரோகித் 2203 ரன்கள் குவித்து இரண்டாவது இடத்தில் உள்ளார். 2271 ரன்களுடன் நியூஸிலாந்து வீரர் குப்தில் முதலிடத்தில் உள்ளார். இந்த சாதனை படைக்க ரோகித்துக்கு 69 ரன்களே தேவைப்படுகிறது. அதேபோல் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள் கிறிஸ் கெய்ல், குப்தில் இருவரும் 103 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளனர். ரோகித் 96 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். 

இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங் பவுலிங் இரண்டிலுமே வலுவாகத்தான் உள்ளது. கடைசி போட்டி என்பதால் முந்தைய போட்டிகளில் விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கலாம் எனத் தெரிகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோட்டையான சேப்பாக்கத்தில் தோனி இல்லாமல் இந்திய அணி களமிறங்குவது சென்னை ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் அளிக்கிறது.