வெளியிடப்பட்ட நேரம்: 20:44 (11/11/2018)

கடைசி தொடர்பு:07:27 (12/11/2018)

`கடைசி ஓவரில் 23, எக்ஸ்ட்ராஸில் 20 ரன்கள் !’ - சென்னையில் 181 ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் #INDvWI

சென்னையில் நடைபெற்று வரும் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான கடைசி டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 182 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி.

நிகோலஸ் பூரன்

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹோப் மற்றும் ஹெட்மெயர் களமிறங்கினர். இந்திய அணியின் பந்து வீச்சை கலீல் மற்றும் தமிழக வீரர் சுந்தர் ஆகியோர் தொடங்கினர். தொடக்கத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி, பின்னர் அதிரடியில் இறங்கியது. குறிப்பாக ஹெட்மெயர் அதிரடியாக விளையாடினார். அப்போது பந்துவீச வந்த சஹால், முதல் பந்திலே ஹோப்-பை வெளியேற்றி நம்பிக்கை அளித்தார். மேலும், அவர் தனது அடுத்த ஓவரிலேயே ஹெட்மெயரையும் வெளியேற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரன் ரேட் சற்று குறைந்தது. 

பூரான்

அதன் பின்னர் டேரன் பிராவோவுடன் - தினேஷ் ராம்தின் இணைந்தார். ராம்தின் 15 ரன்கள் எடுத்த நிலையில் சுந்தர் பந்துவீச்சீல் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார். அடுத்துக் களமிறங்கிய நிகோலஸ் பூரன் அதிரடியில் கலக்கினார். புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விரட்டி மிரட்டினார். இறுதிக்கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் விக்கெட்டை எடுக்க முடியாமல் பந்துவீச்சாளர்கள் திணறினர். வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் அதிரடி காட்ட 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது.

வெஸ்ட் இண்டீஸ்

கலீல் வீசிய கடைசி ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ரன்கள் எடுத்தது. அதேபோல், 16 வொய்டுகள் உட்பட 20 ரன்களை இந்திய அணி உதிரிகளாக வாரிவழங்கியது. இந்த டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இந்திய அணி தரப்பில் சஹால் 2 விக்கெட்டுகள் எடுத்தார். சுந்தர் ஒரு விக்கெட் எடுத்தார். சுந்தர் சிறப்பாக பந்து வீசிய போதும் வைடு எக்ஸ்ட்ரா வகையில் 8 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் வென்று தொடரை ஏற்கெனவே கைப்பற்றிவிட்ட நிலையில், தொடரை ஒயிட் வாஷ் செய்ய 182 ரன்கள் எடுத்தாக வேண்டும்.