`கடந்த 5 - 10 ஆண்டுகளில் இந்திய அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் சஹாதான்!’ - கங்குலி ஆருடம் | saha is the best wicket keeper, say ganguly

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (11/11/2018)

கடைசி தொடர்பு:08:05 (12/11/2018)

`கடந்த 5 - 10 ஆண்டுகளில் இந்திய அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் சஹாதான்!’ - கங்குலி ஆருடம்

கடந்த 10 ஆண்டுகளில் சாஹா தான் இந்திய அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் என்று கங்குலி தெரிவித்துள்ளார். 

கங்குலி

இந்திய அணியில் முன்னாள் கேப்டன் தோனி தனது சிறப்பான ஆட்டம் மூலம் ஆதிக்கம் செலுத்திய காரணத்தால் பல விக்கெட் கீப்பர்கள் இரண்டாம் இடத்திலே இருந்து விட்டனர். தினேஷ் கார்த்திக், பார்திவ் பட்டேல், சஹா என இந்தப் பட்டியல் நீளும். கடந்த 2014 -ம் ஆண்டு தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், சஹா அணியில் இடம் பிடித்தார். இரண்டாவது விக்கெட் கீப்பர் இடத்தில் படேல் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இருந்தனர், ஆனால், இந்த ஆண்டு தொடக்கத்தில் காயம் காரணமாக சஹா விலக அந்த இடத்தை ரிஷப் பண்ட் பிடித்துக்கொண்டார். இளம் வீரரான அவரும், தனக்குக் கிடைத்த வாய்ப்பைச் சிறப்பாக பயன்படுத்திக்கொண்டு தற்போது ஆஸ்திரேலிய செல்லும் அணியிலும் இடம் பிடித்து விட்டார். 

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, விக்கெட் கீப்பர்கள் சந்திக்கும் சவால்கள் தொடர்பான புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர்,  ``காயம் ஏற்படுவது நமது கையில் இல்லை. விக்கெட் கீப்பர்கள் சர்வ சாதாரணமாகவே டைவ் அடிக்க வேண்டும். அப்படி டைவ் அடிக்கும்போது காயங்கள் ஏற்படும். அது குணமாக நேரம் எடுக்கும். சஹா தற்போது காயத்தால் இந்திய அணியிலிருந்து விலகி ஓராண்டு ஆகப்போகிறது. என்னைப் பொறுத்தவரையில், கடந்த 5 முதல் 10 வருடங்களில் இந்திய அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் அவர்தான் என்று சொல்லுவேன். அவர் எத்தனை சீக்கிரம் காயத்தில் இருந்து குணமாகி வருகிறாரோ, அத்தனை நல்லது” என்றார். சஹாவுக்கு தற்போது 34 வயதாவதாலும், இளம் வீரர் பண்ட் சிறப்பாக விளையாடுவதாலும், சஹா அணிக்குத் திரும்புவதில் சிக்கல் உள்ளது.