சென்னையில் மையம் கொண்ட தவான், பண்ட் புயல்கள்; த்ரில் போட்டியில் இந்தியா வெற்றி! #Indvswi | India won the t20 series against west indies

வெளியிடப்பட்ட நேரம்: 22:53 (11/11/2018)

கடைசி தொடர்பு:08:09 (12/11/2018)

சென்னையில் மையம் கொண்ட தவான், பண்ட் புயல்கள்; த்ரில் போட்டியில் இந்தியா வெற்றி! #Indvswi

சென்னையில் நடைபெற்ற இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான கடைசி டி-20 கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட் வாஷ் செய்தது. 

 

இந்தியா

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் பூரன் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார். இந்திய அணிதரப்பில் சஹால் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார். 


பின்னர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் இலக்குடன் களமிறங்கியது இந்தியா அணி. இந்தத் தொடரில் அதிரடி ஃபார்மில் இருக்கும் கேப்டன் ரோகித் இந்த முறை ஏமாற்றினார். 4 ரன்னில் ஆட்டமிழந்து இந்திய அணிக்கு மோசமான தொடக்கத்தையே தந்தார். அதன் பின்னர் களமிறங்கிய ராகுல் அதிரடியாக பவுண்டரிகள் அடித்து நம்பிக்கை அளித்தாலும், 17 ரன்னில் தாமஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 4 பவுண்டரிகள் விளாசினார். 

பண்ட் தவான்

 

அதன் பின்னர் தொடக்க ஆட்டக்காரர் தவானுடன் இணைந்தார் இளம் வீரர் பண்ட். 6 ஓவர்களுக்குள் இரண்டு விக்கெட்டை இழந்து விட்டதால், முதலில் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி, 10 -வது ஓவருக்குப் பின்னர் அதிரடியில் இறங்கியது. ஓவருக்கு 10 ரன்னிக்கு மேல் வேண்டும் என்ற நிலையில் விக்கெட் கொடுக்காமல், விரட்டி அடித்தனர் தவானும் ரிஷப் பண்ட்டும். அதிரடியாக விளையாடிய தவான் முதலில் அரைசதம் அடித்தார். அவரைத் தொடர்ந்து பண்ட் அரை சதம் விளாசினார். 

பண்ட்

இவர்கள் இருவரின் அதிரடி ஆட்டத்தால், இந்திய அணியின் வெற்றி எளிதானது. இறுதிக்கட்டத்தில் பண்ட் 58 ரன்கள் எடுத்த நிலையில் க்ளீன் போல்டு ஆகி வெளியேறினார். இறுதி வரை நிலைத்து நின்று ஆடிய தவான் 2 பந்துக்கு 1 ரன் தேவை என்ற நிலையில் 92 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதிப் பந்தில் ஒரு ரன் தேவை என்ற நிலையில் மணீஷ் பாண்டே, சிங்கிள் எடுக்க முயற்சிக்க, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மிஸ் ஃபீல்டு செய்ய வெற்றி இலக்கை கடைசிப் பந்தில் எட்டியது இந்தியா. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில், 182 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது இந்தியா. எளிதில் வெற்றி பெற வேண்டிய போட்டியில் இறுதிப் பந்து வரை ஆட்டம் சென்றது. 

இதன் மூலம், டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. ஏற்கெனவே, இந்தியா டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கிலும் வெற்றி கொண்டது குறிப்பிடத்தக்கது.