வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (12/11/2018)

கடைசி தொடர்பு:17:20 (12/11/2018)

உடல்நிலை பாதித்த சிறுமியைத் தூக்கிக்கொண்டு ஓடிய இந்திய மகளிர் கிரிக்கெட் கேப்டன் கவுர்!

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது இந்திய கேப்டன் கவுர் செய்த காரியம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. 

கவுர்

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 9-ம் தேதி வெஸ்ட் இண்டீஸில் தொடங்கியது. இந்திய அணி நியூசிலாந்தை எதிர்த்து 10-ம் தேதி தொடக்கப் போட்டியில் களமிறங்கியது. இந்தப் போட்டியில் 49 பந்துகளில் சதம் விளாசி இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் சாதனை படைத்துள்ளார். இதையடுத்து நேற்று பாகிஸ்தானுடன் இரண்டாவது போட்டி நடைபெற்றது. இதில் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 

நேற்றைய போட்டி தொடங்கும் முன் இந்திய கேப்டனின் செயல் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. ஐ.சி.சி நடத்தும் போட்டிகளில் வீரர்கள் தங்களுடன் சிறுவர்களை அழைத்து வந்து தேசிய கீதம் இசைக்கும் வரை தங்களுடன் வைத்திருப்பது வழக்கம். நேற்றைய போட்டியின்போது கவுர் முன்பு நின்றிருந்த ஒரு சிறுமி மோசமான உடல்நிலையில் நின்றிருக்கிறார். அதைக் கவனித்த கவுர் தேசிய சீதம் முடியும் வரை அந்தச் சிறுமி கீழே விழாமல் தாங்கிப் பிடித்துக்கொண்டே நின்றுகொண்டிருந்தார். பிறகு, பாடல் முடிந்த அடுத்த நொடியில் உடல்நிலை சரியில்லாத சிறுமியைத் தன் கைகளில் தூக்கிக்கொண்டு ஓடி அங்குள்ள அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இவரின் இந்தச் செயல் நெட்டிசன்கள் மத்தியிலும் கிரிக்கெட் ரசிகர்களிடத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.