வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (15/11/2018)

கடைசி தொடர்பு:14:50 (15/11/2018)

அறிமுகம், அதிரடி சதம், ஆட்ட நாயகன்... நவம்பர் 15-ல் சச்சின்!

24 ஆண்டுகள் கிரிக்கெட் உலகைக் கட்டியாண்டு, #SRT200 என்று மும்பையில் ஓய்ந்த, சச்சின் டெண்டுல்கர் எனும் மாபெரும் சகாப்தம் தொடங்கிய நாள் இன்று...!

அறிமுகம், அதிரடி சதம், ஆட்ட நாயகன்... நவம்பர் 15-ல் சச்சின்!

29 ஆண்டுகளுக்கு முன் இதே நாள்... நவம்பர் 15, 1989... கராச்சி நேஷனல் ஸ்டேடியத்தில் நான்கு வீரர்களுக்கு `Debut Cap' கொடுக்கப்படுகிறது. இருவர் நீல நிற இந்தியத் தொப்பியையும், இருவர் பச்சை நிற பாகிஸ்தான் தொப்பியையும் அணிந்து தங்கள் டெஸ்ட் பயணத்தைத் தொடங்கினர். 23, 21, 18, 16 என நான்கு இளைஞர்கள். இருபதைத் தாண்டியபின் அறிமுகமான அந்த இருவரும் விரைவிலேயே காணாமல் போனார்கள். அந்த 18 வயது இளைஞன், பாகிஸ்தானின் மிகச் சிறந்த பௌலர்களுள் ஒருவரானான் - வக்கார் யூனிஸ். அந்த 16 வயது இளைஞன் பின்னாளில் கிரிக்கெட் உலகின் மகத்தான பேட்ஸ்மேன் ஆனான். 24 ஆண்டுகள் கிரிக்கெட் உலகைக் கட்டியாண்டு, SRT200 என்று மும்பையில் ஓய்ந்த, 'சச்சின் டெண்டுல்கர்' எனும் மாபெரும் சகாப்தம் தொடங்கிய நாள் இன்று..!

34,357 சர்வதேச ரன்கள், 100 சதங்கள் என அந்த 24 வருடப் பயணத்தை ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனும் இன்று அசைபோட்டுக்கொண்டிருக்கிறார்கள். சச்சினின் ஓய்வுக்குப் பிறகு ஐந்தாறு வருடங்களாக கிரிக்கெட் பார்க்காதவர்கள்கூட இன்று ஷார்ஜா நினைவுகளில் மூழ்கியிருப்பார்கள். ரசிகர்கள் மட்டுமல்ல, சச்சினும் கூட! `ஒவ்வொரு வருடமும் இந்த நாள், நான் முதன்முதலாக அறிமுகமானதை எனக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது. 24 வருடங்கள் இந்திய அணிக்காக விளையாடியதை நினைத்துப் பெருமை கொள்கிறேன்' என்று ட்வீட் செய்திருக்கிறார் லிட்டில் மாஸ்டர். இந்த நாள்தான் எவ்வளவு முக்கியமானது. சச்சின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, உலக கிரிக்கெட்டுக்கே இது முக்கியமான நாள். 

டெண்டுல்கர் - லாரா

ஒவ்வொரு நவம்பர் 15-ம் அவருக்கு அந்த அறிமுகம் நினைவில் இருந்திருக்கும். போட்டிகள் ஏதும் இல்லாத நாளாக இருந்தால் அவை வெறும் நினைவாகக் கடந்து போயிருக்கும். ஆனால், களத்தில் இருக்கும்போது...? அந்த நாளை ஒவ்வொரு முறையும் மெருகேற்ற நினைத்திருப்பார். அப்படி ஒவ்வொரு நவம்பர் 15-ம் தேதியும் சச்சின் களத்தில் என்ன செய்தார் என்று வரலாற்றைப் புரட்டிப் பார்த்தோம். அதிலும் சச்சின் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறார். இந்த பேட்டிங் மேஸ்ட்ரோ கடைசியாக தன் பேட்டைக் கொண்டு வித்தைகள் செய்ததும் நவம்பர் 15-ம் தேதிதான்! 

இந்தத் தேதியில் மொத்தம் 6 டெஸ்ட் போட்டிகளிலும், 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியிருக்கிறார் சச்சின். டெஸ்ட் போட்டிகளில் அவரால் அதை மிகப்பெரிய ஆட்டமாக மாற்ற முடியாமல் போயிருந்தாலும், ஒருநாள் போட்டிகளில் தன் ராஜ்ஜியத்தைத் தொடர்ந்திருக்கிறார். இதோ சச்சினும், நவம்பர் பதினைந்தும்...

சச்சின்

15-11-1989 : கராச்சியில் நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிராக தன் முதல் சர்வதேசப் போட்டியில் விளையாடினார் சச்சின். 16 ஆண்டுகள், 205 நாள்களில் அறிமுகமாக, அன்றைய தேதிக்கு மூன்றாவது இளம் கிரிக்கெட்டரானார். இன்று வரை இந்திய அணிக்கு அறிமுகமான மிக இளம் வீரர் இவர்தான். முதல் நாளில் சச்சின் பேட்டிங், பௌலிங் எதுவும் செய்யவில்லை. ஃபீல்டராக மட்டுமே செயல்பட்டார். இரண்டாம் நாளில் தன் முதல் ஓவரை வீசினார். பேட்ஸ்மேன் சச்சினுக்கு முன்பாக, இந்த உலகம் கண்டது பௌலர் சச்சினைத்தான்!

15-11-1992 : இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் டர்பனில் நடந்த டெஸ்ட் மேட்ச். 13-ம் தேதி தொடங்கிய போட்டியில், இரண்டாவது நாளே சச்சின் 11 ரன்களுக்கு அவுட்டாகிவிட்டார். அவ்வப்போது மழை பெய்ததால், அன்று முழுதும் இந்திய அணிதான் பேட் செய்தது. நவம்பர் 15-ம் தேதி சச்சின் முழுமையாக டிரஸ்ஸிங் ரூமிலேயே கழித்தார்.

15-11-1995 : நியூசிலாந்து எதிராக ஜாம்ஷெட்பூரில் நடந்த ஒருநாள் போட்டி. 20 பந்துகளில் 30 ரன் எடுத்து அவுட்டானார் டெண்டுல்கர். நியூசிலாந்து பேட்டிங் செய்தபோது 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் கொடுத்தார். விக்கெட் ஏதும் விழவில்லை. 

சச்சின் - சேவாக்

15-11-2003 : எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த முக்கியமான நாளில் விளையாடிய சச்சின், இந்த முறை அதை இன்னும் ஸ்பெஷலாக்கினார். நியூசிலாந்து பௌலர்களை அடித்து நொறுக்கி, தன் 36-வது ஒருநாள் சதத்தை நிறைவு செய்து ஹைதராபாத் ரசிகர்களை சிலிர்க்கவைத்தார். 87-வது பந்தில் தன் சதத்தை நிறைவு செய்தபோது, அவரது ஓப்பனிங் பார்ட்னர் சேவாக் 89 பந்துகளில் 65 ரன்களே அடித்திருந்தார். அதிரடி மன்னனைவிட ஒரு படி மேலே அதிரடி காட்டியிருப்பார் சச்சின். ஆனால், சேவாக் அந்தப் போட்டியில் 130 ரன்கள் எடுத்ததால், ஆட்டநாயகன் விருதை அவர் தட்டிச் சென்றார்.

15-11-2007 : எதிரணி பாகிஸ்தான்... விடுவாரா சச்சின்..? குவாலியர் ஆடுகளத்தில் தாண்டவம் ஆடினார். தன் 42-வது ஒருநாள் சதத்தை நெருங்கிவிட்டு, 97 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். அப்போது கடைசி 21 இன்னிங்ஸ்களில் ஆறாவது முறையாக தொன்னூறுகளில் வெளியேறியிருந்தார் சச்சின். அதற்கு ஒரு வாரம் முன்புதான் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 99-ல் அவுட்டாகியிருந்தார். ஆனால், இந்தியாவை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றதால் இந்த முறை ஆட்டநாயகன் அவர்தான். 

15-11-2010 : ஹைதராபாத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் 12-ம் தேதி தொடங்கியது. 15-ம் தேதி நியூசிலாந்து அணி பேட்டிங். இரண்டு ஓவர்கள் பந்துவீசிய சச்சின், விக்கெட் எடுக்காமல் 7 ரன்கள் கொடுத்திருந்தார்.

டெண்டுல்கர்

15-11-2011 : வெஸ்ட் இண்டீஸ் அணியோடு ஈடன் கார்டனில் மோதிய டெஸ்ட் போட்டி. ஆட்டத்தின் முதல் நாளான 14-ம் தேதியே 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் சச்சின். டிராவிட், லட்சுமண், தோனி சதங்களால் 15-ம் தேதி முழுக்க இந்தியாதான் பேட்டிங் செய்தது. அன்றைய தினம் முழுக்க, சச்சின் டிரஸ்ஸிங் ரூமில்தான் இருந்தார்.

15-11-2012 : பலமான இங்கிலாந்து அணியை அஹமதாபத்தில் எதிர்கொண்டது இந்தியா. 18 பந்துகளில் 13 ரன்கள் எடுத்த சச்சின், ஸ்வானின் பந்துவீச்சில் வெளியேறினார்.

15-11-2013 : சச்சின் எனும் சகாப்தம் கடைசியாக பேட்டிங் செய்த நாள். தன் சொந்த ஊரில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக அரைசதம் அடித்து வெளியேறினார் சச்சின். முந்தைய நாள் ஆட்டநேர முடிவில் 73 பந்துகளில் 38 ரன்கள் அடித்திருந்த சச்சின், 15-ம் தேதி கொஞ்சம் அதிரடியாகவே விளையாடினார். அன்று மட்டும் 45 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து, 118 பந்துகளில் 74 ரன்கள் அடித்து அவுட்டானார். 

Images Courtesy: twitter.com/sachin_rt


டிரெண்டிங் @ விகடன்