வெளியிடப்பட்ட நேரம்: 20:27 (15/11/2018)

கடைசி தொடர்பு:20:57 (15/11/2018)

ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் இந்திய மகளிர் அணி - ஃபீல்டிங் தேர்வு செய்த அயர்லாந்து #INDWvsIREW #WWT20

ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் இந்திய மகளிர் அணி - ஃபீல்டிங் தேர்வு செய்த அயர்லாந்து #INDWvsIREW #WWT20

வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் மகளிர் டி20 உலகக்கோப்பையில், ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்யும் முனைப்பில் களமிறங்குகிறது இந்திய அணி. க்ரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி,  அயர்லாந்துடன் இன்று மோதுகிறது. இந்தப் போட்டியில் டாஸ்வென்ற அயர்லாந்து அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது.

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா,  முதலில் பேட்டிங் செய்தது. டாப்  ஆர்டரில் களமிறங்கிய பாடியா , மந்தானா, ஹேமலாதா ஆகியோர், சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஏமாற்றம்.  நான்காவது இடத்திலும் அனுபவமிக்க வீராங்கனை மித்தாலி ராஜ் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாகக் களமிறங்கிய இளம் வீராங்கனை ஜெமிமா ராட்ரிக்ஸ், பேட்டிங்கில் அசத்தினார்.

இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மாற்றங்கள்குறித்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரின் முடிவுகளில் குழப்பம் இருப்பதாகத் தெரிந்தது. ஆனால், அதிரடி ஜோடி சேர்ந்த ஜெமிமா, கவுர் கூட்டணி 134 ரன்கள் சேர்த்தது. ஜெமிமாவின் அதிரடி இந்தப் போட்டியிலும் தொடர்ந்தால், இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக அமையும்.

இந்திய அணி


பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணியுடனான இரண்டாவது போட்டியிலும் டாஸ் வென்ற இந்திய அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சுக்கு 133 ரன்களுக்கு ஆட்டமிழந்தது பாகிஸ்தான். சேஸிங்கின்போது, தொடக்க வீரர் மித்தாலி ராஜின் சிறப்பான ஆட்டம், அணியின் வெற்றியை உறுதிசெய்தது. ஒவ்வொரு போட்டியிலும் தேவையான பேட்டிங் ஆர்டர் மாற்றங்களை கேப்டன் கவுர் கவனமாகச் செய்துவருகிறார். அணி வீராங்கனைகளும் அதற்கு ஒத்துழைப்புகொடுத்து, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது  அணிக்கு பலம். இன்னும்  ஸ்மிரிதி மந்தானா  பேட்டிங்கில் அதிரடி காட்டாதது ஏமாற்றம். அயர்லாந்துக்கு எதிரான போட்டியில், மந்தானாவும் அசத்தும் பட்சத்தில், இந்திய மகளிர் அணி க்ரூப் பி பட்டியலில் முதலிடம் பெறும். அறிமுக போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பெளவுலிங்கில் கலக்கினார் ஹேமலதா.  அயர்லாந்து அணி வீராங்கனைகளின்  விக்கெட்டுகளைப் பந்தாட பூனம் யாதவ், ஹேமலதா கூட்டணி ஃபார்மில் உள்ளது கூடுதல் பலம்.

டி20 சாம்பியன்ஷிப் தொடரில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளில் பங்கேற்ற  அயர்லாந்து அணி, தோல்வியைத் தழுவியது. மற்ற வீராங்கனைகள் இன்னும் பேட்டிங்கில் சோபிக்காத நிலையில்,  தொடக்க வீராங்கனை ஷில்லிங்டன் மட்டும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆறுதல் அளித்துவருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 93 ரன்கள் மட்டுமே எடுத்த  அயர்லாந்து அணி, பாகிஸ்தானுக்கு எதிராக 139 ரன்களை சேஸ் செய்யத் தவறியது. 100 ரன்களைக் குவிக்க அயர்லாந்து அணியின் பேட்டிங் லைன்-அப் திணறுகிறது.

இதுவரை  அயர்லாந்து அணிக்காக விளையாடியுள்ள  6 டி20 போட்டிகளில், 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் லூசி ஓ ரெய்லி. டி20 சாம்பியன்ஷிப்பில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் 5.00-க்கும் குறைவான எகனாமியைத் தக்கவைத்துக்கொண்டுள்ள ரெய்லி, இந்திய அணியின் ரன் குவிப்பை கட்டுக்குள் வைக்க திட்டமிடுவார். பிராவிடன்ஸில் நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில், 194 ரன்கள் குவித்தது இந்தியா. இந்த மைதானம், ஏற்கெனவே  இந்திய வீராங்கனைகளுக்கு நன்கு பரிச்சயம் என்பது ப்ளஸ் பாயின்ட்.