வெளியிடப்பட்ட நேரம்: 18:39 (19/11/2018)

கடைசி தொடர்பு:09:43 (20/11/2018)

டி-20யை மிஞ்சிய டெஸ்ட்... 4 ரன்களில் பாகிஸ்தானை வீழ்த்திய பிளாக் கேப்ஸ்! #PAKvNZ

விக்கெட் கீப்பர் வாட்லிங் கத்திக்கொண்டே இருக்கிறார். அசார் அலி, அபாசிடம் பேசிக்கொண்டே இருக்கிறார். வில்லியம்சன் வீரர்களை உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கிறார். ஆனால், அந்த பிட்ச்சுக்குள் ஏதோவோர் அமைதி. இதையெல்லாம் டி-20 போட்டியால் எவ்வளவு நேரம் கொடுத்திட முடியும். கண் இமைக்கும் நொடியில் அங்கு எல்லாம் முடிந்துவிடும். ஆனால், எட்டு ஓவர்களாக அந்த மைதானம் அதே மனநிலையில் இருந்தது. Test Cricket at it's best! 

டி-20யை மிஞ்சிய டெஸ்ட்... 4 ரன்களில் பாகிஸ்தானை வீழ்த்திய பிளாக் கேப்ஸ்! #PAKvNZ

டி-20 போட்டிகள் மட்டும்தான் பரபரப்பான கிரிக்கெட் அனுபவத்தைக் கொடுக்குமா? இல்லவே இல்லை, டெஸ்ட் கிரிக்கெட் கொடுக்கும் பரபரப்பு, அதையெல்லாம் பல மடங்கு மிஞ்சியது. டெஸ்ட் கிரிக்கெட் கொடுக்கும் அனுபவம் டி-20 போட்டிகளால் நினைத்துப்பார்க்க முடியாதது. அதை இன்று நிரூபித்திருக்கிறது பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி. வெறும் 4 ரன்களில் பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றிருக்கிறது நியூசிலாந்து. #PAKvNZ

இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, அபுதாபியில் நடந்தது. தொடக்கம் முதலே ஆடுகளம் பந்துவீச்சுக்குச் சாதகமாக இருந்ததால், ரன் எடுப்பது கடினமாக இருந்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. காயத்திலிருந்து மீண்டு வந்த கேப்டன் வில்லியம்சன் மட்டும் நிலைத்து நின்று 63 ரன்கள் எடுத்தார். யசிர் ஷா அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார். பாகிஸ்தான் அணியும் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தாலும், ஆசாத் சஃபீக் - பாபர் ஆலம் இணை ஆடிய பொறுப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸில் 227 ரன்கள் எடுத்தது. டிரென்ட் போல்ட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பாகிஸ்தான் - #PAKvNZ

74 ரன்கள் பின்தங்கியிருந்த நியூசிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 249 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஹசன் அலி, யசிர் ஷா தலா 5 விக்கெட்டுகள் கைப்பற்றி, நியூஸியைச் சுருட்டி வீசினர். 176 ரன்கள் எடுத்தால் வெற்றி. முழுதாக 2 நாள்கள் இருக்கின்றன. கொஞ்சம் பொறுமையாக ஆடியிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், பாகிஸ்தான்..? 

பாகிஸ்தான் அணியின் தொடக்க ஜோடி (இமாம் உல் ஹக் - முகமது ஹஃபீஸ்) ஆட்டத்தை நிதானமாகவே கையாண்டது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்திருந்த அணி, நான்காவது நாளின் முதல் செஷனிலேயே ஆட்டத்தின் பிடியை இழக்கத் தொடங்கியது. அஜாஜ் படேல் வீசிய அற்புதச் சுழலில் இமாம் உல் ஹக் வெளியேற, அடுத்து வந்த வீரர்கள் மோசமான ஷாட் செலக்ஷனால் தொடர்ந்து வெளியேறினர். முகமது ஹஃபீஸ் வெளியே சென்ற பந்தை மோசமாக அடித்து அவுட்டாக, ஈஷ் சோதி வீசிய ஃபுல் டாஸ் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஹாரிஸ் சோஹைல். 40-0 என்றிருந்த பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் 48-3 என்றானது. 

அஜாஜ் பட்டேல் #PAKvNZ

ஆனால், நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஆசாத் சஃபீக், அசார் அலி ஜோடி நிதானமாக விளையாடி 82 ரன்கள் சேர்த்தது. உணவு இடைவேளைக்கு முன் இந்த ஜோடியை நீல் வேக்னர் பிரிக்க, பாகிஸ்தானின் சரிவு தொடங்கியது. அறிமுக வீரர் அஜாஜ் படேல் பாகிஸ்தானின் மிடில் ஆர்டரைப் பதம்பார்த்தார். 25 பந்துகள் இடைவெளியில் 4 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை நோக்கிப் பயணித்தது பாகிஸ்தான். விக்கெட்டுகள் ஒருபுறம் விழுந்துகொண்டிருந்தாலும், மூன்றாவது வீரராகக் களமிறங்கிய அசார் அலி, தனி ஆளாகப் போராடிப் பார்த்தார். 

164-9. பாகிஸ்தான் வெற்றி பெற 12 ரன்களே தேவை. நியூசிலாந்துக்கு ஒரே விக்கெட். ஒரு பேட்ஸ்மேன் , ஒரு டெய்லெண்டர். கிரீஸைச் சுற்றி நிற்கும் ஃபீல்டர்கள். 90-களைப் போல் உயிர் பெற்றது. கடைசி பேட்ஸ்மேனாக வந்த முகமது அபாஸ் பிடிக்கும் ஒவ்வொரு பந்தின்போதும் பாகிஸ்தான் ரசிகர்களின் இதயத்துடிப்பு எகிறிக்கொண்டே இருந்தது. அசார் அலி அடித்த ஒவ்வொரு சிங்கிளிலும் மனம் தளர்கிறார்கள் நியூசிலாந்து ஃபீல்டர்கள். விக்கெட் கீப்பர் வாட்லிங் கத்திக்கொண்டே இருக்கிறார். அசார் அலி, அபாசிடம் பேசிக்கொண்டே இருக்கிறார். வில்லியம்சன் வீரர்களை உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கிறார். ஆனால், அந்த பிட்ச்சுக்குள் ஏதோவோர் அமைதி. இதையெல்லாம் டி-20 போட்டியால் எவ்வளவு நேரம் கொடுத்திட முடியும். கண் இமைக்கும் நொடியில் அங்கு எல்லாம் முடிந்துவிடும். ஆனால், எட்டு ஓவர்களாக அந்த மைதானம் அதே மனநிலையில் இருந்தது. Test Cricket at it's best! 

#PAKvNZ

ஒருவழியாக, அஜாஜ் படேலின் அற்புதச் சுழலில் அவரும் எல்.பி.டபிள்யூ ஆக, பாகிஸ்தான் அணி, வெற்றி பெற ஐந்து ரன்களே தேவை என்ற நிலையில் 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கிட்டத்தட்ட பாகிஸ்தானின் கோட்டையாக மாறிப்போன அபுதாபி மைதானத்தில், நியூசிலாந்து அணி அவர்களை வென்றுவிட்டது. அஜாஜ் பட்டேல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.


டிரெண்டிங் @ விகடன்