வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (21/11/2018)

கடைசி தொடர்பு:14:20 (21/11/2018)

ப்ரோ கபடி அப்டேட்ஸ் - தெலுங்கு டைடன்ஸை துவம்சம் செய்த தமிழ் தலைவாஸ்!

ப்ரோ கபடிப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. நேற்று நடந்த போட்டியில், முதல்முறையாக தெலுங்கு டைடன்ஸை வீழ்த்தியிருக்கிறது தமிழ் தலைவாஸ் அணி. இதைப் போலவே,  குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணியைச் சொந்த மண்ணிலேயே வீழ்த்திய பலரையும் ஆச்சர்யப்படுத்தியது, டெல்லி தபாங் அணி.

தமிழ் தலைவாஸ்

ப்ரோ கபடி தொடரில் ஒரு பகுதியாக, அகமதாபாத்தில் கபடிப் போட்டிகள் நடந்துவருகின்றன. இதில், நேற்றிரவு நடந்த 72–வது லீக் ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ் அணி 27–23 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

தமிழ் தலைவாஸ் அணியின்  கேப்டன் அஜய் தாக்கூர்,  ஒரே ரெய்டில் 3 புள்ளிகள் எடுத்து அசத்தினார். இந்தப் போட்டியில், இவர் 8 புள்ளிகளும், சுகேஷ் ஹெட்ஜ் 5 புள்ளிகளும் எடுத்தனர். தெலுங்கு டைடன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ராகுல் செளத்ரியைத் தமிழ் தலைவாஸ் அணியினர் மடக்கிப்பிடித்து நிறைய நேரம் வெளியே உட்கார வைத்தது, வெற்றிக்கு உதவியாக இருந்தது. நேற்றைய போட்டியில் வெற்றிபெற்றதன்மூலம் சென்னையில் நடந்த போட்டியில் தெலுங்கு டைடன்ஸ் அடைந்த தோல்விக்குப் பழிதீர்த்துக்கொண்டது தமிழ் தலைவாஸ்.

தமிழ் தலைவாஸ்

சொந்த மண்ணில் தோல்வி காணாத அணியாக இருந்தது குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணி. நேற்று நடந்த போட்டியில், டெல்லி தபாங் அணி குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. டெல்லி அணியைச் சேர்ந்த மீரஜ் சேக், அற்புதமான ரெய்டில் பலமான குஜராத் அணியைச் சாய்த்து வெற்றிபெற வைத்துள்ளார்.

புரோ கபடி

இன்று நடைபெறும் போட்டியில், தமிழ் தலைவாஸ் அணி, பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தினால், அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக்கொள்ள முடியும்.