வெளியிடப்பட்ட நேரம்: 14:39 (22/11/2018)

கடைசி தொடர்பு:16:40 (22/11/2018)

பல்லிகலே டெஸ்ட் வெற்றி... கிரிக்கெட் உலகத்துக்கு இங்கிலாந்து சொல்லும் மெசேஜ்!

பல்லிகலே டெஸ்ட் வெற்றி... கிரிக்கெட் உலகத்துக்கு இங்கிலாந்து சொல்லும் மெசேஜ்!

இலங்கைக்கு எதிரான ஒரு நாள், டி20 தொடர்களைக் கைப்பற்றிய இங்கிலாந்து அணி, டெஸ்ட் தொடரையும் விட்டுவைக்கவில்லை. இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து, இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற 17 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. இந்த வெற்றிக்குக் காரணம்.. இங்கிலாந்தின் சுழற்பந்துவீச்சு!

ஸ்பின்னுக்குச் சாதகமான துணைக்கண்ட ஆடுகளங்களை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டது இங்கிலாந்து. அதுவும் இரண்டாவது போட்டி நடந்த அந்தப் பல்லிகலே மைதானம்... ஒரே போட்டியில் 38 விக்கெட்டுகளை ஸ்பின்னர்களுக்குப் பரிசளித்துள்ளது. வேகப்பந்துவீச்சுக்குப் பெயர்போன இங்கிலாந்து அணி, ஸ்பின்னில் சாதித்ததுதான் ஆச்சர்யம். இலங்கை அணியின் 20 விக்கெட்டுகளில், 19 விக்கெட்டுகளை சுழற்பந்துவீச்சாளர்களே வீழ்த்தினர். ஒரு ரன் அவுட். பெயர்போன இங்கிலாந்து வேகப்பந்து கூட்டணி விக்கெட்டே வீழ்த்தவில்லை!

இங்கிலாந்து

இங்கிலாந்தின் ஜாக் லீச் (8), மொயீன் அலி (6), அடில் ரஷீத் (4), ஜோ ரூட் (1), இலங்கையின் தனஞ்சயா (8), பெராரா (7), புஷ்பகுமாரா (4) ஆகியோர் போட்டி போட்டுக்கொண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், சுழற்பந்து வீச்சால் அதிக விக்கெட்டுகள் சரிந்தது இந்தப் போட்டியில்தான்! டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஃபாஸ்ட் பௌலர்கள் விக்கெட்டே வீழ்த்தாமல், இங்கிலாந்து அணி வெற்றி பெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டி இது. 1952-ல் கான்பூரில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும், 1956 ஆஷஸ் டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அப்படி வென்றுள்ளது. இதற்கு முன் 1969-ம் ஆண்டு இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டியில், ஸ்பின்னர்கள் 37 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஒரு போட்டியில், சுழற்பந்துவீச்சாளர்கள் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியது அப்போதுதான். அந்தச் சாதனையை இந்த ஆட்டம் முறியடித்துள்ளது. 

விக்கெட் போட்டி இடம்   ஆண்டு 
38 இலங்கை vs இங்கிலாந்து பல்லிகலே 2018
37 இந்தியா vs நியூசிலாந்து நாக்பூர் 1969
35 இந்தியா vs ஆஸ்திரேலியா கொல்கத்தா 1956
35 இந்தியா vs பாகிஸ்தான் பெங்களூரு 1987

இந்திய துணைக்கண்ட மைதானங்கள் சுழலுக்குச் சாதகம் என்பதை உலகறியும். ஆனால், சில தருணங்களில் சுற்றுப்பயணம் செய்யும் வெளிநாட்டு அணியும், இதை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளும். உதாரணமாக கடந்த ஆண்டு புனேவில் நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட். அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய ஸ்பின்னர்கள் ஸ்டீவன் ஓ கீஃப், நாதன் லயான் இருவர் மட்டுமே 17 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஓ கீஃப் இரண்டு இன்னிங்ஸ்களிலும் தலா 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அந்தப் போட்டியில் இந்தியா 212 ரன்கள் மட்டுமே எடுத்து 333 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதுபோன்ற நிகழ்வுகளும் அவ்வப்போது நடக்கும். இங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அணிகள் பெரும்பாலும் புதிய சுழற்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்துவதால், முடிவுகள் அவர்களுக்குச் சாதகமாக அமைவதில்லை. இதுபோன்ற சில தருணங்களில் மட்டும் அந்த வாய்ப்பு அமையும். அப்படியான வாய்ப்பு இங்கிலாந்துக்கு இந்தமுறை அமைந்தது. அதை அவர்கள் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டனர். 

இங்கிலாந்து அணியின்  திட்டம் மிகச்சிறப்பாக இருந்தது. ஸ்டுவார்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ் போன்ற சீனியர்களை அமரவைத்துவிட்டு, அடில் ரஷித், ஜேக் லீச், மொயீன் அலி என `த்ரீ மேன் ஸ்பின் அட்டாக்'குடன் களமிறங்கினார். ஆட்டத்தின்போதும் தொடக்கத்திலிருந்தே சுழற்பந்து வீச்சாளர்களை தொடர்ந்து பயன்படுத்தினார்.  ஒரு புறம் அடில் ரஷித் நிதானமாகப் பந்துவீச, மறுபுறம் மொயீன் அலி தன் பங்குக்கு விக்கெட்டுகளை எடுத்துக் கொண்டிருந்தார். இதற்கு நடுவில், அமைதியாகச் சுழன்று கொண்டிருந்த ஜாக் லீச்சின் பந்துகள் மடமடவென இலங்கை பேட்ஸ்மேன்களை பெவிலியனுக்கு அனுப்பின. 

இங்கிலாந்து

டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான 3-வது போட்டியிலேயே தன்னுடைய சுழற்பந்து வித்தைகளைச் சரியாகப் பயன்படுத்திய ஜாக் லீச், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இரண்டு இன்னிங்ஸிலும், இங்கிலாந்து அணியின் விக்கெட் வேட்டையைத் தொடங்கி வைத்து, போட்டி முடிவில் மொத்தம் 8 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். குஷல் சில்வா, குசால் மெண்டிஸ், டி பெராரா ஆகிய வீரர்கள் லீச்சின் பந்துவீச்சுக்கு இரண்டு இன்னிங்ஸிலும் ஆட்டமிழந்தனர். இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடர், இங்கிலாந்தின் சுழற்பந்தை மேலும் பலப்படுத்தியுள்ளது. மொயீன் அலி, அடில் ரஷித் வரிசையில் ஜாக் லீச் தனக்கான இடத்தைப் பிடித்துள்ளார். 

ஆட்டத்தின் நான்காவது இன்னிங்ஸில், மொயீன் அலி 72 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 4-வது  இன்னிங்ஸில் நான்குக்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுப்பது வாடிக்கையாகிவிட்டது. இங்கிலாந்து அணியின் டெஸ்ட் வெற்றிகளுக்கு, மொயீன் அலியின் கடைசி இன்னிங்ஸ் செயல்பாடு முக்கியமானது. இதுவரை, 7 முறை நான்காவது இன்னிங்ஸில் நான்குக்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி, வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியுள்ளார். விளையாடிய 22 நான்காவது இன்னிங்ஸில், 55 விக்கெட்டுகள் (சராசரி 21.8). சுழற்பந்து ஜாம்பவான்கள் ஷேன் வார்ன், அனில் கும்ப்ளேவின் சராசரியைவிட இவரது சராசரி அதிகம். பேட்டிங், பெளலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மொயீன் அலி, இங்கிலாந்து அணியின் தவிர்க்க முடியாத கிரிக்கெட் வீரராக உருவாகி வருகிறார். 

இங்கிலாந்து அணி சமீப காலமாக டெஸ்ட் அரங்கில் கோலோச்சுவதன் காரணம் இதுதான். `டெஸ்ட் போட்டிகளில் ஆடமாட்டேன்' என்று சொன்ன அடில் ரஷீத்தை மீண்டும் அழைத்தனர். பேட்டிங்கில் தடுமாறிய மொயீன் அலிக்கு நம்பிக்கை கொடுத்து ஆல்ரவுண்டர் ஆக்கிவிட்டனர். ஸ்டுவார்ட் பிராட் போன்ற மிகப்பெரிய வீரரை வெளியே அமர்த்துகின்றனர். டி-20 என்று வந்துவிட்டால் யோசிக்காமல் ஜோ ரூட்டையே கழட்டி விடுகின்றனர். இந்த தைரியமான, அதே சமயம் சிறப்பாகத் திட்டமிட்டப்பட்ட இந்த அணுகுமுறைதான் இங்கிலாந்தை இப்போது மீண்டும் நம்பர் 1 நோக்கி அழைத்துச் செல்கிறது!


டிரெண்டிங் @ விகடன்