`யுவராஜுக்கு முன் களமிறங்கியது ஏன்?’ - 2011 உலகக் கோப்பை ஃபைனல் நினைவுகளைப் பகிர்ந்த தோனி | Dhoni speaks about 2011 world cup final match

வெளியிடப்பட்ட நேரம்: 18:22 (22/11/2018)

கடைசி தொடர்பு:18:22 (22/11/2018)

`யுவராஜுக்கு முன் களமிறங்கியது ஏன்?’ - 2011 உலகக் கோப்பை ஃபைனல் நினைவுகளைப் பகிர்ந்த தோனி

2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் யுவராஜுக்கு முன்னால் களமிறங்கியது ஏன் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மனம் திறந்திருக்கிறார். 

தோனி - யுவராஜ் சிங்

2011-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியை இந்தியக் கிரிக்கெட் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் 1983-ம் ஆண்டுக்குப் பின்னர் இந்திய அணி உலகக் கோப்பையைக் கையில் ஏந்திய தினம் அன்று. இலங்கை அணிக்கெதிரான அந்தப் போட்டியில் இந்திய அணிக்கு 274 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சேஸிங் செய்யக் களமிறங்கிய இந்திய அணி சச்சின் மற்றும் சேவாக் ஆகியோரது விக்கெட்டுகளை 31 ரன்கள் சேர்ப்பதற்குள் இழந்து தடுமாறியது. அப்போது கௌதம் கம்பீருடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி 3வது விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்து நல்ல அஸ்திவாரம் அமைத்துக் கொடுத்தார். 22வது ஓவரில் விராட் கோலி ஆட்டமிழந்ததும், கேப்டன் தோனி களமிறங்கினார்.

உலகக் கோப்பைத் தொடரில் தொடர் நாயகனாக ஜொலித்த யுவராஜுக்கு முன்னதாக தோனி களமிறங்கியது, ரசிகர்கள் மட்டுமின்றி விமர்சகர்களையும் புருவம் உயர்த்தச் செய்தது. ஆனால், அன்று தோனி நிகழ்த்தியதோ இந்தியக் கிரிக்கெட் ரசிகன் என்று மறக்கமுடியாத மேஜிக். ஆட்டமிழக்காமல் தோனி 91 ரன்கள் சேர்க்க, இந்திய அணி உலகக் கோப்பையைக் கையில் ஏந்தியது. இதன்மூலம் டி20 மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பை என இரண்டு உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையை தோனி படைத்தார். இன்றைய தேதி வரை இந்த சாதனை தொடர்ந்து வருகிறது. 

தோனி - யுவராஜ் சிங்

இந்த நிலையில், அந்தப் போட்டியில் யுவராஜுக்கு முன்னர் தான் களமிறங்கியது ஏன் என்பது குறித்து தோனி தற்போது மனம் திறந்திருக்கிறார். சத்தீஸ்கர் மாநிலம் டோங்கர்கோன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தோனி கூறுகையில், ``இலங்கை அணியின் பெரும்பாலான பந்துவீச்சாளர்கள் ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடியவர்கள். அந்த நேரத்தில் முத்தையா முரளீதரன் பந்துவீசிக் கொண்டிருந்ததால், நான் யுவராஜுக்கு முன்னதாகக் களமிறங்கலாம் என முடிவு செய்தேன். சென்னை அணிக்கான வலைப் பயிற்சியின்போது முரளீதரன் வீசிய பந்துகளை அதிகம் எதிர்க்கொண்டிருந்தேன். எனவே, அவரின் பந்துவீச்சில் நம்பிக்கையுடன் அதிக ரன்களைச் சேர்க்க முடியும் என்று நினைத்ததால், இறுதிப் போட்டியில் யுவராஜுக்கு முன்னதாக நான் களமிறங்கினேன்’’ என்று தெரிவித்தார்.

மேலும், விக்கெட் கீப்பர் பணிச் சுமை இருப்பதால் ஒரு கீப்பரால் வெற்றிகரமான கேப்டனாக செயல்பட முடியாது என தேர்வாளர்கள் நினைத்ததை மாற்றியதாகக் கூறிய தோனி, ``விக்கெட் கீப்பர் என்பவர் கேப்டனுக்குப் பயனளிக்கும் ஆலோசனைகளைச் சொல்லக் கூடியவர். அவரது ஆலோசனைகள் மூலம் கேப்டனின் பணிச்சுமையைக் குறைக்கக் கூடியவர் கீப்பர்’’ என்றார்.