பேட்டிங் சறுக்கல்... ஃபீல்டிங் சொதப்பல்... இறுதி வாய்ப்பைத் தவறவிட்ட இந்தியா! #WT20 | India loses t20 semi-final against England

வெளியிடப்பட்ட நேரம்: 17:14 (23/11/2018)

கடைசி தொடர்பு:17:14 (23/11/2018)

பேட்டிங் சறுக்கல்... ஃபீல்டிங் சொதப்பல்... இறுதி வாய்ப்பைத் தவறவிட்ட இந்தியா! #WT20

பேட்டிங் சறுக்கல்... ஃபீல்டிங் சொதப்பல்... இறுதி வாய்ப்பைத் தவறவிட்ட இந்தியா! #WT20

களிர் டி-20 உலகக்கோப்பை அரை இறுதியில் இங்கிலாந்திடம் தோற்று இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை நழுவவிட்டுள்ளது இந்தியா. குரூப் சுற்றில் நன்றாக விளையாடிய இந்திய அணி, முக்கியமான போட்டியில் தோற்று வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. வலுவான பேட்டிங் லைன் அப் கொண்டிருந்த இந்திய அணி, நல்ல ஸ்கோரை எட்டும் என்ற எதிர்பார்ப்பைத் தரை மட்டமாக்கியது இங்கிலாந்தின் பந்துவீச்சு. பெளலிங் மட்டுமன்றி பேட்டிங், ஃபீல்டிங் எனக் களத்தில் தீயாய் விளையாடிய இங்கிலாந்து, நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

இந்தியா

23 பந்துகளில் 34 ரன்கள் எடுத்த ஸ்மிரிதி மந்தானவின் ஆட்டத்தினால், பவர் ப்ளே ஓவர்களில் இந்தியாவுக்குச் சாதகமாக இருந்த ஆட்டம், அதன் பிறகு இங்கிலாந்து பக்கம் சாய்ந்தது. ஸ்மிரிதி, தானியா ஜோடி மட்டும் 43 ரன்களுக்குத் தாக்குப் பிடித்தது. ரன் அவுட்டாகி வெளியேறிய ஜெமிமா ராட்ரிக்யூஸ் (26) தவிர்த்து, தானியா பாடியா (11), வேதா கிருஷ்ணமூர்த்தி (2), ஹர்மன்ப்ரீத் கவுர் (16) என பேட்டிங் லைன் அப் மொத்தமும் கேட்ச் கொடுத்தே ஆட்டமிழந்தது. 13.5 ஓவர் முடிவில், 89/3 என்ற நிலையில் இருந்த இந்திய அணிக்கு, அடுத்த 15 ரன்களில் 5 விக்கெட்டுகள் சரிந்தன. இங்கிலாந்தின் வெற்றி இலக்கு வெறும் 113 ரன்கள்! நிலையான பார்ட்னர்ஷிப் இல்லாமல், சிங்கிள்ஸ் டபுள்ஸ் எடுக்கத் தவறியதே இந்திய அணியால் இன்னிங்ஸ் பில்ட் செய்ய முடியாமல் போனதற்கான காரணம்.

இந்தத் தவறுகளை செய்யாத இங்கிலாந்து அணி, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகள் சரிந்தாலும், ஜோன்ஸ் - நடாலி ஷிவர் ஜோடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. 105 ரன்கள் சேர்த்த இந்த ஜோடி, இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்பை அதிகரித்தது. 

இந்தியா - இங்கிலாந்து

ஃபீல்டிங் சொதப்பல்

தொடரின் முக்கியமான போட்டியில், இந்திய வீராங்கனைகள் தொடர்ந்து ஃபீல்டிங்கில் சொதப்பியது இங்கிலாந்துக்குச் சாதகமானது. அனுஜா பந்தில் நடாலி ஷிவர் கொடுத்த கேட்ச்சை பூனம் யாதவ் தவறவிட்டார். 1 ரன்னில் தப்பித்த ஷிவர், இங்கிலாந்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். சொதப்பலான ஃபீல்டிங்கைப் பயன்படுத்திக் கொண்ட அவர், போட்டி முடிவில் 52 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தார். 

க்ரூப் சுற்றில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஃபீல்டிங்கில் கோட்டைவிட்ட இங்கிலாந்து அணி, அரை இறுதியில் சுதாரித்துக் கொண்டது. பந்துகளைத் தூக்கி அடித்த இந்திய வீராங்கனைகளின் கேட்சுகளை கச்சிதமாகப் பிடித்தனர். ஃபீல்டிங்கில் ஷார்ப்பாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்பட்ட இங்கிலாந்து வீராங்கனைகளுக்கு மூன்று ரன் - அவுட்ஸ் போனஸாக கிடைத்தது.

மித்தாலி இல்லாத ஆட்டம்

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், பேட்டிங் ஆர்டர் மாற்றத்தால் மித்தாலி களமிறங்கவில்லை. ஆனால், 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், மித்தாலி இல்லாமல் 167 ரன்கள் குவித்த இந்திய அணி, 47 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. வெற்றிகள் க்ளிக்கான போது, மித்தாலி இல்லாத இந்திய அணிக்குக் கிடைத்த பாராட்டுகள், நாக் - அவுட் தோல்வியின் போது விமர்சனமாக மாறியுள்ளது.

வேகப்பந்துவீச்சுக்கு அதிகம் வாய்ப்பளிக்காத கவுர், சுழற்பந்து வீச்சாளர்களை மீது அதிக நம்பிக்கை வைத்தார். ப்ளான் ஏ வைத்திருந்த கவுரிடம் ப்ளான் பி இல்லை. 112 என்ற எளிதான இலக்கை டிஃபெண்ட் செய்ய இந்திய அணி செயல்படுத்திய திட்டம் வீணானது. விக்கெட் எடுப்பதிலேயே முனைப்பாக இருந்த இந்திய வீராங்கனைகள், இங்கிலாந்து வீராங்கனைகள் சிங்கிள்ஸ், டபுள்ஸ் எடுப்பதைத் தடுக்கத் தவறிவிட்டனர். இது டி-20 போட்டி, தொடர் வெற்றிகளைப் பெற்ற அணிக்கும் அடி சறுக்கும். இந்தியாவுக்கு அரையிறுதியில் சறுக்கிவிட்டது!


டிரெண்டிங் @ விகடன்