வெளியிடப்பட்ட நேரம்: 16:53 (23/11/2018)

கடைசி தொடர்பு:16:56 (23/11/2018)

தொடர் மழை! - மெல்போர்ன் டி20 போட்டி கைவிடப்பட்டதாக அறிவிப்பு #AUSvIND

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான இரண்டாவது டி20 போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

இந்தியா - ஆஸி. அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி நடைபெற்ற மெல்போர்ன் மைதானம்

Photo Credits: BCCI

மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இந்த முறையும் ஃபீல்டிங் தேர்வு செய்தார். கடந்த போட்டியில் விளையாடிய அதே பிளேயிங் லெவனுடன் இந்தியா களம்கண்டது. தொடக்கம் முதலே ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தனர். புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே கேப்டன் பின்ச் ஆட்டமிழந்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா 11 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து ரன்குவிக்கத் தடுமாறிய ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. மெக்டொமார்ட் 32 ரன்களுடனும் ஆண்ட்ரூ டை 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மழை தொடர்ந்ததால், போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 

மழை நின்ற நிலையில், டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இந்திய அணிக்கு 11 ஓவர்களில் 90 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களமிறங்கத் தொடங்கிய நிலையில், மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால், இரண்டாவது முறையாக இந்திய அணியின் இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. 5 ஓவர்களில் 46 ரன்கள் என இந்திய அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மீண்டும் மழை குறுக்கிடவே போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முதல் போட்டியில் வென்ற ஆஸ்திரேலிய அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான மூன்றாவது டி20 போட்டி சிட்னியில் வரும் 25-ம் தேதி நடைபெறுகிறது.