வெளியிடப்பட்ட நேரம்: 21:23 (23/11/2018)

கடைசி தொடர்பு:21:23 (23/11/2018)

`விராட் கோலி என்னோட ஃபேவரைட்தான்... ஆனால்!’ - அஃப்ரிடி ஓப்பன் டாக்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஒரு பேட்ஸ்மேனாக எனக்குப் பிடித்த வீரர் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி கூறியிருக்கிறார். 

விராட் கோலி - அஃப்ரிடி

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் மற்றும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி விளையாடுகிறது. முதல் 2 டி20 போட்டிகள் முடிவடைந்தநிலையில், ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்ற நிலையில், மெல்போர்னில் நடைபெற்ற இரண்டாவது போட்டி மழை காரணமாகக் கைவிடுவதாக அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி மனம்திறந்திருக்கிறார். விராட் கோலி, தான் விளையாடும் ஒவ்வொரு தொடரிலும் பேட்டிங்கில் சாதனைகள் படைத்து வருவதாகவும், மிகச்சிறந்த ஃபீல்டராகத் தன்னை மெருகேற்றிக் கொண்டிருப்பதாகவும் அஃப்ரிடி பாராட்டியிருக்கிறார். அதேநேரம், ஒரு கேப்டனாக அவர் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருப்பதாகவும் அஃப்ரிடி சுட்டிக் காட்டியிருக்கிறார். 

அஃப்ரிடி - விராட் கோலி

தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள அவர், ``எனக்கு மிகவும் பிடித்த வீரர்களுள் ஒருவர் விராட் கோலி; ஆனால், ஒரு கேப்டனாக அவர், நிறைய கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான தொடர் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தத் துடிக்கிறது’’ என்று தெரிவித்திருக்கிறார்.