``இந்திய கேப்டன் ஒரு பொய்யர், தகுதியற்றவர்” - கொதிக்கும் மிதாலி ராஜின் மேனேஜர் | Mithali raj's manager slams captain kaur

வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (24/11/2018)

கடைசி தொடர்பு:11:09 (24/11/2018)

``இந்திய கேப்டன் ஒரு பொய்யர், தகுதியற்றவர்” - கொதிக்கும் மிதாலி ராஜின் மேனேஜர்

இந்திய அணியின் கேப்டன் கவுரை, அனுபவ வீராங்கனை மிதாலி ராஜின் மேனேஜர் கடுமையாக விமர்சித்துள்ளார். 

மிதாலி

பெண்கள் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகள் நாளை மோத உள்ளன. லீக் சுற்றில் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெற்ற இந்திய அணி, அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராகப் படுதோல்வியடைந்தது. கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி, அரையிறுதியுடன் வெளியேறியது அதிர்ச்சியளித்தது. 

முக்கியமான அரையிறுதி ஆட்டத்தில், பலமான இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியாவின் அனுபவ வீராங்கனையான மிதாலி ராஜ் ஏன் சேர்க்கப்படவில்லை என்பதுதான் நேற்றைய தினத்தின் முக்கியமான கேள்வியாக இருந்திருக்கும். சமூக வலை தளங்களிலும் இது தொடர்பாக பெரும் விவாதமே நடைபெற்றுவந்தது. இந்நிலையில், போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹமன்ப்ரீத் கவுர்,  ``ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் மிதாலிக்கு காயம் காரணமாக ஓய்வு வழங்கப்பட்டது. அந்தப் போட்டியில் வெற்றிபெற்றோம். வெற்றிக் கூட்டணியை மாற்ற வேண்டாம் என்ற கருத்தின் அடிப்படையில்தான் மிதாலி அணியில் சேர்க்கப்படவில்லை. எல்லா நாளும், நமக்கு சாதகமான நாளாக அமைந்துவிடுவதில்லை. 140 ரன்கள் எடுத்திருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கலாம்” என்று தெரிவித்தார். மேலும் மிதாலி ராஜை அணியில் தேர்வு செய்யப்படாததுக்கு வருத்தம் தெரிவிக்கவேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்தார். 

கவுர்

இந்நிலையில், நேற்று மிதாலி ராஜின் மேனேஜர் அனிஷா குப்தா, ட்விட்டரில் கேப்டன் கவுரை கடுமையாக விமர்சித்திருந்தார். அவர் தனது ட்வீட்டில்,  ``பெண்கள் அணி விளையாட்டை நம்புவதில்லை. அரசியலைத்தான் நம்புகிறது. அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில், மிதாலியின் அனுபவம் கைகொடுத்ததைப் பார்த்த பின்னரும் அவர் தேர்வு செய்யப்படாதது கண்டிக்கத்தக்கது. கவுர் ஒரு பொய்யர், முதிர்ச்சி அற்றவர், தகுதியற்ற கேப்டன்” என விமர்சித்திருந்தார். அடுத்த ட்வீட்டில், ஏமாற்றுபவர் என்றும் கவுரை குறிப்பிட்டிருந்தார். 

பதிவிட்ட சில மணிநேரத்தில், அந்த ட்வீட் அழிக்கப்பட்டுவிட்டது. எனினும், அந்த ட்வீட்டை பதிவிட்டது நான்தான் என அனிஷா ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்ஃபோ இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும்,  ``சரியான இடத்தில் இருந்து இந்த விமர்சனம் வந்துள்ளது. எனக்கு உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், தற்போது போட்டிகள் ஒளிபரப்பப்படுகிறது. யார் சிறப்பாகச் செயல்பட்டார்கள் என்பதைப் பார்க்கிறோம். 

மிதாலிக்கு இழைக்கப்பட்டது அநீதி. அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவரின் திறமையையும் அனுபவத்தையும் பார்த்தபின்னரும் அவருக்கு இது செய்யப்பட்டிருக்கக் கூடாது. இளையோருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கருத்தும் கூறப்படுகிறது, அது உண்மைதான். ஆனால், இங்கிலாந்து போன்ற அணிக்கு எதிராக உலகக்கோப்பை அரையிறுதி மாதிரியான முக்கியப் போட்டியில் இளையோருக்கு வாய்ப்பு வழங்குவதைக் காட்டிலும் அனுபவத்துக்கு முக்கியத்துவம் அளித்திருக்க வேண்டும். நான் டிவிட்டரில் பதிவிடும்போது கடும் கோபத்தில் இருந்தேன். மிதாலிக்கு வழங்கப்பட்ட அநீதியை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக லீக் சுற்றில் இரண்டு அரை சதம் அடித்திருந்தார் மிதாலி. இந்தத் தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் மிதாலி சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. டி20 போட்டிகளில் 17 அரைசதங்களுடன் முன்னணி வீராங்கனையாக இருக்கும் மிதாலியை முக்கியப் போட்டியில் அணியின் சேர்க்காதது  அதிர்ச்சியளித்ததாகப் பெரும்பாலானோர் கமூக வலை தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும், மிதாலியின் ஆட்டத்தில் வேகம் இல்லை எனவும், அதிரடியாக விளையாடுவதில்லை என்ற விமர்சனமும் உள்ளது. முன்னதாக, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுடனான தொடருக்கு முன் கேப்டன் கவுர், மைதானம் முழுவதும் துடிப்புடன் ஓடும் வீராங்கனைகள் அணிக்குத் தேவை, 30 யார்டு வட்டத்துக்குள் மட்டும் ஃபீல்டிங் செய்பவர்கள் தேவையில்லை என அணி நிர்வாகத்திடம் கூறியதாகக் கூறப்படுகிறது. அப்போதே மிதாலிக்கும் கவுருக்கும் இடையே மோதல் நிலவுவதாகக் கூறப்பட்டுவந்தது. இந்நிலையில், அனிஷா குப்தாவின் இந்தக் கருத்தால் டிரெஸ்ஸிங் ரூமில் நடந்துவந்த மோதல் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக மிதாலி அல்லது கவுர் விளக்கம் அளித்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.