தோனி குறித்து முஷாரஃப் கேட்ட கேள்வி -நினைவுகளைப் பகிரும் கங்குலி | ganguly shares about dhoni

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (26/11/2018)

கடைசி தொடர்பு:06:30 (26/11/2018)

தோனி குறித்து முஷாரஃப் கேட்ட கேள்வி -நினைவுகளைப் பகிரும் கங்குலி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, தற்போது விளையாடிக்கொண்டிருக்கும் அணியில் இருந்து 85 முதல் 90 சதவீதம் வரை உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இருப்பார்கள் என தான் கருதுவதாக தெரிவித்தார். 

கங்குலி - தோனி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, பல்வேறு தருணங்களில் பழைய சம்பவங்களை நினைவுக் கூர்ந்து வருகிறார்.  இந்நிலையில் நேற்று அவர் தோனி குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். கங்குலி,  ``தோனி ஒரு சாம்பியன். முதன்முறையாக டி20 உலகக்கோப்பை தொடரை வென்றது முதல் தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அணியில் இருக்கும் மற்ற வீரர்களைப் போல் அவரும் செயல்பட வேண்டும். எந்தத் துறையாக இருந்தாலும், அனுபவம் இருந்தாலும் சிறப்பாக செயல்படவில்லை என்றால் அந்த இடத்தை மற்றவர்கள் நிரப்பி விடுவர். 

தோனி களத்தில் இருக்கும்போது, இன்னமும் அவரால் சிக்ஸர்கள் பறக்கவிட முடியும் என நம்புவேன். அவர் ஒரு திறமையான கிரிக்கெட் வீரர். 2006 -ம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா விளையாடிய போது முஷாரஃப் , தோனியைக் காட்டி, இவரை எங்கிருந்து கொண்டு வந்தீர்கள்? என்று கேட்டார். வாகா எல்லையில் நடந்துகொண்டிருந்தவரை இந்திய அணிக்குள் கொண்டு வந்துவிட்டோம் என அவருக்கு நகைச்சுவையாகப் பதிலளித்தேன்” என்றார். 

வரும் 2019 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த கங்குலி,  `நான் தேர்வுக்குழு தலைவர் கிடையாது.  எனினும் தற்போது விளையாடிக்கொண்டிருக்கும் வீரர்களில் 85 முதல் 90 சதவீதம் வரை உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இருப்பார்கள் எனக் கருதுகிறேன்’ என்றார்.