வெளியிடப்பட்ட நேரம்: 07:38 (27/11/2018)

கடைசி தொடர்பு:07:38 (27/11/2018)

பெண்கள் உலகக்கோப்பை அரையிறுதிச் சர்ச்சை -பி.சி.சி.ஐ அதிகாரிகளைச் சந்தித்த கவுர், மிதாலி!

பெண்கள் உலகக் கோப்பை டி-20 போட்டியின் அரையிறுதியில் இந்தியா இங்கிலாந்திடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்தத் தொடரில் சிறப்பாகச்  செயல்பட்ட மிதாலி ராஜ் சேர்க்கப்படாதுதான் இந்தத் தோல்விக்குக் காரணம் என்று கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், பயிற்சியாளர் ரமேஷ் பவார் ஆகியோர்மீது விமர்சனங்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து இதை விசாரிக்க முன்னாள் இந்திய கிரிக்கெட் மகளிர் அணித் தலைவி  டயானா எடுல்ஜி தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை பி.சி.சி.ஐ நியமித்துள்ளது. 

மித்தாலி ராஜ் ஹர்மன்பிரீத்


இதற்கிடையே திங்கள்கிழமை இந்தியப் பெண்கள் டி-20 அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் மிதாலி ராஜ் ஆகியோர் மேனேஜர் திருப்தி பட்டாச்சார்யாவுடன் பி.சி.சி.ஐ-யின் தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோக்ரி மற்றும் ஜெனரல் மேனேஜர் சபா கரிம் ஆகியோரைச் சந்தித்துள்ளனர்.

``ஆமாம், நாங்கள் (சோஹ்ரி மற்றும் கரிம்) மிதாலி, ஹர்மன்பிரீத் மற்றும் மேனேஜர் திருப்தி பட்டாச்சார்யா ஆகியோரைச் சந்தித்தோம். அவர்கள் தனித்தனியாக எங்களைச் சந்தித்து அவர்கள் தரப்பு நியாயங்களைக் கூறியுள்ளனர். அவர்கள் கூறிய அனைத்தையும் பதிவு செய்துள்ளோம். ஆனால், என்ன விஷயங்கள் பற்றிப் பேசப்பட்டன என்பதைச் சொல்ல முடியாது” என்று கூறியுள்ளார் சோஹ்ரி. ``இந்த விஷயம் தொடர்பாக விசாரிக்க விசாரணைக் குழு ஒன்றை நியமித்துள்ளோம். அந்தக் குழு அறிக்கையைத் தாக்கல் செய்தபின்னர் அதுபற்றி விவாதித்து முடிவு எடுக்கப்படும் மேலும் தேவையெனில் ஒவ்வொருவரையும் தனித்தனியே அழைத்து அவர்களின் கருத்து கேட்கப்படும்” என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையே பயிற்சியாளர் ரமேஷ் பவார் புதன்கிழமை சோஹ்ரி மற்றும் கரிமைச் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பவாரின் பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு அவரது பதவிக்காலத்தை நீட்டிப்பது தொடர்பாக இருக்கலாம் என்று கருத்துகள் பரவி வருகின்றன.

``நவம்பர் 20-ல் பயிற்சியாளராக ரமேஷ் பவாரின் பதவிக்காலம் முடிவடைந்தது. புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் பி.சி.சி.ஐ-யால் எதிர்பார்க்கப்படுகிறது. பவாரும் அதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்குமுன் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ளேவிடமும் அவரது பதவிக்காலம் முடிந்ததும் மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கக் கேட்கப்பட்டது. ஆனால், அதை அவர் மறுத்துவிட்டார். ஆனால், புதிய பயிற்சியாளரை நியமிக்கவே நிர்வாகம் விரும்புகிறது” என்று பி.சி.சி.ஐ-யின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்னைகளை அடுத்து மிதாலி ராஜ் மற்றும் ஹுலன் கோஸ்வாமி இனி டி-20 போன்ற சிறிய அதிரடி போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம் என்றும் அவர்கள்  இனி 50 ஓவர் போன்ற பெரிய போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றும் கருத்துகள் சுற்றி வருகின்றன.