வெளியிடப்பட்ட நேரம்: 19:49 (27/11/2018)

கடைசி தொடர்பு:15:30 (28/11/2018)

`இந்த அவமானத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை' - உடைந்து போன மிதாலி ராஜ்!

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நீக்கப்பட்டது குறித்து மிதாலி ராஜ் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதிகாரம் படைத்த சிலர் தன்னை அழிக்கப்பார்க்கின்றனர் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

மிதாலி ராஜ்

மேற்கிந்திய தீவில் நடைபெற்ற ஐ.சி.சி மகளிர் டி20யின் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது இந்தியா.  இந்த ஆட்டத்தில் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விளக்கமளித்த ஹர்மன் பிரீத் கவுர், `அணியின் நலனுக்காகத்தான் இந்த முடிவு' எனத் தெரிவித்தார். கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர், பி.சி.சி.ஐ தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோரி, பொது மேலாளர்  சபா கரீம் ஆகியோரைச் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். இந்த பிரச்னை தொடர்பாக பி.சி.சி.ஐ நிர்வாகக்குழுவான (சிஏஓ) விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து மிதாலி ராஜ் பி.சி.சி.ஐ தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோரி, பொது மேலாளர் சபா கரீம் ஆகியோருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

மிதாலி

 

அதில், ``20 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் முதல்முதலாக மன சோர்வடைந்துள்ளேன். அதிகாரத்தில் இருக்கும் சிலர், என்னையும், என் நம்பிக்கையையும் உடைக்க பார்க்கின்றனர்; இப்படியான நேரத்தில்  இந்நாட்டுக்கான எனது சேவை உண்மையில் மதிப்புடையதா? என்று எண்ணும் நிலைக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன். நான் கேப்டன் ஹர்மன்ப்ரீத்க்கு எதிராக இல்லை என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். என்னை  அணியில் இருந்து விடுவிக்கும் பயிற்சியாளரின் முடிவுக்கு ஹர்மன் பிரீத் கவுர் ஆதரவு தெரிவித்ததை மட்டுமே எதிர்த்தேனே தவிர வேறு எதையும் நான் செய்யவில்லை. நாட்டுக்காக உலகக் கோப்பையை வென்றுகொடுக்கவேண்டும் என எண்ணினேன். ஆனால் ஒரு சிறப்பான வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டோம். இந்த அவமானத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நொறுங்கிப்போயுள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.