வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (28/11/2018)

கடைசி தொடர்பு:07:55 (28/11/2018)

ரஹ்மான் இசை... ஷாரூக் உரை... மாதுரி தீக்‌ஷித் நடனம் - கோலாகலமாகத் தொடங்கியது ஹாக்கி உலகக் கோப்பை

2018-ம் ஆண்டின் ஆண்கள் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியின் தொடக்க விழா புவனேஸ்வர் நகரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சியோடு கோலாகலமாகத் தொடங்கியது. 


2018  ஹாக்கி உலகக் கோப்பை போட்டி

 

தொடக்க நிகழ்ச்சி ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ‘ஜெய் ஹிந்த் இந்தியா’ என்ற பாடலோடு ஆரம்பமானது. அதைத் தொடர்ந்து சர்வதேச ஹாக்கி அமைப்பின் தலைவர் நரேந்திர பத்ரா நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து அணிகளுக்கும் தன்னுடைய வாழ்த்துகளைக் கூறினார். 

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு போட்டியைத் தொடங்கிவைத்துப் பேசிய ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ``போட்டியில் கலந்துகொள்ள வந்துள்ள அனைத்து சர்வதேச அணிகளின் வீரர்கள், அதன் நிர்வாகிகள் மற்றும் ஒடிசா மாநில ஹாக்கி அமைப்பின் நிர்வாகிகள் அனைவரையும் வரவேற்கிறேன். நீங்கள் அனைவரும் 45 மில்லியன் ஒடிசா மக்களின் விருந்தினர்கள்” எனக் கூறினார். 

அதன்பின்பின் போட்டியில் கலந்துகொள்ளவுள்ள 16 நாடுகளின் அணி கேப்டன்களும் வரிசையாக மேடைக்கு வந்தனர். மேடைக்கு வந்தவர்கள் அனைவரையும் வரவேற்றுத் தன்னுடைய வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டார் பாலிவுட் நடிகர் ஷாரூக் கான். 

``ஹாக்கி பந்தைக் கைகளில் வைத்துக்கொண்டு வீரர்கள் ஓடும்போது அது ஒரு கவிதைபோல இருக்கிறது. வீரர்கள் அனைவரும் கலைஞர்களாக இருக்கிறார்கள். ஹாக்கி மற்ற விளையாட்டுகளைப்போல அல்ல. அதில் உணர்வுகள், எண்ணங்கள் இவற்றின் கூட்டில் உருவாகும் செயல்கள் எனப் பலவற்றின் கலவை” என்று தன்னுடைய பேச்சின்மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் ஷாரூக் கான்.

அதைத் தொடர்ந்து பாலிவுட் நடிகை மாதுரி தீக்‌ஷித்தின் நடனமும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கச்சேரியும் நடைபெற்றது. இறுதியில் நிகழ்ச்சியின்  2018 ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியின் பாடலான ‘ஜெய்ஹிந்த் இந்தியா’ என்ற பாடலோடு நிறைவுபெற்றது. 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ``ஒடிசாவில் நடைபெறவுள்ள ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் கலந்துகொள்ள வந்திருக்கும் அனைத்து அணியையும் வரவேற்கிறேன். இந்தப் போட்டி விளையாட்டு ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். அதுமட்டுமல்ல இந்தியாவின் கலாசாரத்தை, குறிப்பாக ஒடிசாவின் கலாசாரத்தைத் தெரிந்துகொள்வதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மோடி

``2018 உலகக் கோப்பை ஹாக்கி போட்டி தொடங்கியது. இந்திய ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள். உங்கள் முழுத் திறமையைக் காட்டுங்கள். முழு நாடும் உங்களுடன் நிற்கும்!” என்று இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மத்திய அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர்  வாழ்த்துச்செய்தியை தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் நவம்பர் 28-ல் தென் அமெரிக்காவை எதிர்கொள்ளவுள்ளது.