வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (28/11/2018)

கடைசி தொடர்பு:08:00 (28/11/2018)

'நாதன் லயனை எதிர்கொள்ள கோலி பிரத்யேகப் பயிற்சி!' - ஆஸி., வேகம் இந்தியா வியூகம்

கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து வரும் டிசம்பர் மாதம் 6-ம் தேதி டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி, அடிலெய்டு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

கோலி

முன்னதாக, இந்திய அணி சிட்னி மைதானத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணியுடன் 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்தப் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக நேற்று இந்திய வீரர்கள் சிட்னி மைதானத்தில் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்தப் பயிற்சியின்போது வீரர்கள் ஆஸ்திரேலிய வீரர்களின் ப்ளஸ் என்று அறியப்படும் விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தினர். 

குறிப்பாக ஆஸ்திரேலிய ஸ்பின்னர் நாதன் லயனை எதிர்கொள்வது தொடர்பாக இந்திய அணியின் விராட் கோலி,  பயிற்சி மேற்கொண்டார். லயன், அனைத்து அணிகளுக்கு எதிராகவும், அனைத்து நாடுகளிலும் சிறப்பாக பந்துவீசியுள்ளார். இந்திய அணிக்கு எதிராக 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள லயன், 64 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். குறிப்பாக 25 இன்னிங்ஸில் இந்திய அணியின் கேப்டன் கோலியை 5 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இதனால் லயனுக்கு எதிராக விளையாடவே பிரத்தியேகமான பயிற்சிகள் மேற்கொண்டார். 

கோலி முதலில், வேகப்பந்துவீச்சாளர்களான புவனேஷ்வர், இஷாந்த் சர்மா ஆகியோரது பந்துவீச்சை எதிர்கொண்டார். சிறிது நேரத்துக்குப் பின்னர் பந்துவீச்சாளர்களின் கால்தடம் ஆடுகளத்தில் பதிந்தது. அதன் பின்னர், கோலி பந்துவீசும் பக்கம் சென்று ஆடுகளத்துக்கு வெளியே ஸ்டெம்ப் வைத்து விளையாடினார். பந்துவீச்சாளர்கள், சரியாக அந்த கால் தடத்தில் பந்துவீசினர். இதை கோலி எதிர்கொண்டு பழகினார். இதற்குக் காரணம், டெஸ்ட் போட்டியின் 4, 5 -ம் நாள் ஆட்டங்களில் லயன், ஆடுகளத்தில் இருக்கும், கால்தடத்தில் சரியாக பந்துவீசி, பந்தை அதிகமாக சுழறச்செய்து பேட்ஸ்மேனுக்கு நெருக்கடி கொடுப்பார். அதை எதிர்கொள்ள கோலி பயிற்சி எடுத்தார். இந்தப் பயிற்சி வீடியோ வெளியாகி கிரிக்கெட்  ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. 

அதேபோன்று ராகுல் டென்னிஸ் பந்துமூலம் வேகமாக வரும் பவுன்சர்களை எதிர்கொள்ளப் பயிற்சி செய்தார்.