வெளியிடப்பட்ட நேரம்: 19:14 (28/11/2018)

கடைசி தொடர்பு:19:14 (28/11/2018)

`என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை; தற்கொலைக்கு முயன்றேன்' - பிக் பாஸில் ஸ்ரீசாந்த் உருக்கம்!

மேட்ச் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டால் தற்கொலைக்கு முயன்றதாக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீசாந்த்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்த ஸ்ரீசாந்த் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது அனைவரும் அறிந்ததே. இதற்காக சில நாள்கள் சிறைவாசமும் அனுபவித்ததுடன், பி.சி.சி.ஐ-யிடமிருந்து வாழ்நாள் தடையும் பெற்றார். ஆனால், இதற்காக நீதிமன்றப் படிக்கட்டு ஏறிய ஸ்ரீசாந்த் அதில் வெற்றியும் பெற்றார். ஆனால், அவர் மீதான வாழ்நாள் தடையை நீக்க பி.சி.சி.ஐ மறுத்துவிட்டது. பி.சி.சி.ஐ-யின் முடிவை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளார். கிரிக்கெட் விளையாட முடியாமல் போனாலும், தனது எதிர்காலத்தை இப்போது சினிமா மூலம் வடிவமைத்து வருகிறார். ஹீரோவாகவும் அவர் நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடித்த டீம் 5 படம் தமிழ், மலையாளத்தில் வெளியாகி ஓரளவுக்கு வரவேற்பு பெற்றது. இதேபோல் அக்சர் 2 உள்ளிட்ட இந்திப் படங்களிலும் நடித்துள்ளார். அதேநேரம் கேரளாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலும் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு தோல்வி பெற்றார். 

விளையாட்டு, அரசியல், சினிமாவை அடுத்து தற்போது தொலைக்காட்சி  நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். இந்தியில் சல்மான் நடத்தி வரும் பிக் பாஸ் சீசன் 12ல் பங்கேற்றுள்ள இவர், அவ்வப்போது தனது கிரிக்கெட் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை தெரிவித்து வருகிறார். அந்தவகையில் சச்சின் குறித்து சமீபத்தில் பேசினார். தற்போது மேட்ச் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டு குறித்துப் பேசியுள்ளார். ``நான் ஸ்பாட் ஃபிக்ஸிங் ஈடுபட்டேன் எனக் கூறுவது பொய்யானது. என்னிடம் ரூ.10 லட்சத்தைக் காட்டி பேரம் பேசினர். எதற்கும் நான் சம்மதிக்கவில்லை. ஆனால் மேட்ச் ஃபிக்ஸிங் ஈடுபட்டேன் எனக் குற்றம் சாட்டினார். இது எனக்கு மிகுந்த மனவேதனையை அளித்தது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலை என்னால் சமாளிக்க முடியவில்லை. இறுதியாகத் தற்கொலைக்கு முயன்றேன். 

என்னைக் குடும்பத்தினர் காப்பாற்றிவிட்டனர். இந்தச் சம்பவங்கள் எல்லாம் குடும்பத்தைத் தவிர யாருக்கும் தெரியாது. பொய் குற்றச்சாட்டால் என் கிரிக்கெட் வாழ்க்கையே முடிந்துவிட்டது. பொய் குற்றச்சாட்டால் நான் மட்டுமல்ல என் பிள்ளைகளும் கிரிக்கெட் விளையாட முடியாமல் போய்விட்டது" எனக் கூறி கண்ணீர் வடித்தார். இவரின் இந்த விளக்கத்தை ட்விட்டரில் பதிவிட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர் ராஜ் குந்த்ரா கிண்டல் செய்யும் வகையில் கருத்து பதிவிட்டிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்த ஸ்ரீசாந்த்தின் மனைவி இதற்குப் பதிலடி கொடுத்துள்ளார். அதில், ``ஸ்ரீசாந்த் குற்றமற்றவர் என நீதிமன்றமே தெரிவித்துவிட்டது. ராஜ் குந்த்ரா ஸ்ரீசாந்த்துக்கு இன்னும் தர வேண்டிய சம்பளப் பணத்தையே தரவில்லை. இப்போது ஸ்ரீசாந்தைக் கிண்டல் செய்து பதிவிடுகிறார். இவ்வளவு தான் குந்த்ராவின் துணிச்சல்" எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க