வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (28/11/2018)

கடைசி தொடர்பு:23:36 (28/11/2018)

`டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவன்..!’ - ரிக்கி பாண்டிங்கின் அட்வைஸ் #INDvAUS

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்திருக்கிறார். 

ரிக்கி பாண்டிங்

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்றும் நோக்கில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறது. சமீபத்தில் முடிந்த டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தநிலையில், 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 6-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கு முன்னதாக, கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணியுடன் 4 நாள்கள் பயிற்சிப் போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது. இந்தப் போட்டியின் முதல் நாளான இன்று மழையால் ஆட்டம் தடைபட்டது. 

தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அஸ்வினுக்குப் பதிலாகக் குல்தீப் சேர்க்கப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். ஆஸ்திரேலியக் கிரிக்கெட் வாரியத்தின் இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டியில், ``வேகப்பந்துவீச்சைப் பொறுத்தவரை பிளேயிங் லெவனில் புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோருகு இந்திய அணி வாய்ப்பளிக்க வேண்டும். ஷமி ரிவர்ஸ் ஸ்விங்கில் வல்லவர். அதேநேரம் புவனேஷ்வர் குமார், புதிய பந்தில் சிறப்பாகப் பந்துவீசக்கூடியவர்’’ என்றார். 
ஆஸ்திரேலிய மைதானங்களின் நிலை சுழற்பந்துவீச்சாளர் தேர்வில் முக்கிய பங்கு வகிக்கும் என்ற பாண்டிங், அதனால் ரிஸ்ட் ஸ்பின்னருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ``அஷ்வினுக்குப் பதில் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பளிப்பதே நல்ல முடிவாக இருக்கும். அஷ்வினின் பங்களிப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து நன்கறிவேன். ஆனால், ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் அவர் எந்த அளவுக்கு விக்கெட் வீழ்த்துவார் என்பது தெரியாது. குறிப்பாக, அடிலெய்டு மற்றும் பெர்த் ஆடுகளங்கள் குறித்து சிந்திக்க வேண்டும். லெக் ஸ்பின்னரையே இதுபோன்ற சூழல்களில் களமிறக்க வேண்டும்’’ என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.