வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (29/11/2018)

கடைசி தொடர்பு:07:19 (29/11/2018)

அதிரடியான வெற்றியோடு உலகக்கோப்பைப் பயணத்தைத் தொடங்கிய இந்திய ஹாக்கி அணி #IndvRSA

14-வது ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில், சி பிரிவில் தென் ஆப்பிரிக்கா, பெல்ஜியம், கனடா ஆகிய அணிகளுடன் இந்தியா பங்கேற்கிறது. இதில் நேற்று புவனேஸ்வர் கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5-0 என்ற கோல் கணக்கில் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதன்மூலம் தன்னுடைய பயணத்தை உற்சாகமாகத் தொடங்கியுள்ளது இந்திய அணி.

ஹாக்கி


போட்டி தொடங்குவதற்குமுன் பயிற்சியாளர் ஹரேந்திர சிங்கிடம் காணப்பட்ட தாக்குதல் மனநிலை, போட்டியின்போது வீரர்களிடமும் காணப்பட்டது. இந்திய வீரர்களே இந்தப் போட்டியில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தினர்.

ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மட்டுமல்ல தனது முதல் கோலை போட்டி தொடங்கிய ஒன்பதாவது நிமிடத்திலேயே பதிவு செய்தது. இந்தியாவின் தடுப்பு ஆட்டக்காரர் ஹரம்ப்ரீத் சிங் லாவகமாக கோலை நோக்கித் தட்டிவிட்ட பந்தை தென் ஆப்பிரிக்க கோல் கீப்பர் சிறப்பாகச் செயல்பட்டுத் தடுத்தார். இந்திய முன்களவீரர்  மன்தீப் சிங் அந்த வாய்ப்பைத் தவறவிடாமல் அதைக் கோலாக்கினார்.

முதல் கோல் அடித்த இரண்டாவது நிமிடத்தில் பிரேந்தர லக்ரா மற்றும் ஹார்திக் சிங் ஆகியோரால் கடத்திக் கொடுக்கப்பட்ட பந்தை மிகவும் சிக்கலான ஆங்கிலிலிருந்து கோலாக்கினார்  மற்றொரு  முன்கள வீரர் ஆகாஷ்தீப் சிங். இதனால் முதல் பாதியில் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதி தொடக்கத்தில் ஹார்திக் சிங் ஒரு எளிமையான பந்தை கோல் ஆக்கமால் தவறவிட்டார். அதேபோல சுமித் குமாரும் பெனால்ட்டி வாய்ப்பை நழுவவிட்டார். இரண்டு கோல் வாய்ப்பைத் தவறவிட்டாலும் இந்தியா வீரர்கள் உற்சாகம் குறையாமல் போட்டியைத் தங்கள் கையிலே வைத்துக்கொண்டனர். இதன்பலனாக 43, 45-வது நிமிடங்களில் நடுகள வீரர் சிம்ரஞ்சீத் சிங் மற்றும் முன்கள வீரர் லலித் உபாத்யாய் அடுத்தது கோல்கள் அடிக்க தென் ஆப்ரிக்காவின் வெற்றிக் கனவு முற்றிலும் தகர்ந்தது. 

சிம்ரஞ்சித் தென் ஆப்பிரிக்காவின் தடுப்பை உடைத்துக்கொண்டு சென்று தனது இரண்டாவது கோலைப் பதிவு செய்தார். இதனால் இந்தியா 5-0 என்ற வலுவான நிலையை அடைந்தது. ஆட்டத்தில் கடைசி நிமிடம் வரை இந்திய அணியினரிடமே பெரும்பாலும் பந்து இருந்தது. அந்த அளவுக்குச் சிறப்பான ஆட்டத்தை இந்திய அணி வீரர்கள் வெளிப்படுத்தினர்.

சரியான தாக்குதல் மற்றும் தடுப்பு முறைகளைக் கையாண்டு நிலையான ஆட்டத்தை இந்தியா வெளிப்படுத்தி 5-0 என்ற மிகப்பெரிய வெற்றியை எளிமையாகச் சாத்தியமாக்கியது.

இரண்டு கோல்கள் அடித்த சிம்ரஞ்சீத் சிங் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டிசம்பர்-2-ல் நடக்கும் தனது இரண்டாவது போட்டியில் இந்தியா பெல்ஜியம் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இதற்குமுன்பாக நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் பெல்ஜியம் அணி கனடா அணியியை 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றிருந்தது.